1 மணி நேரம் காத்திருந்து விட்டு வெளிநடப்பு செய்த ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ.
அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் 1 மணி நேரம் காத்திருந்து விட்டு ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் தமிழ்நாடு அரசு நிதியில் ரூ.645 கோடியில் அரிச்சந்திரா ஆறு திட்டபணிகள், அடப்பாறு திட்ட பணிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஓ. எஸ். மணியன் எம்.எல்.ஏ. தலைமையில் நாளை (திங்கட்கிழமை) திருத்துறைப்பூண்டி-நாகை நெடுஞ்சாலையில் ஆலங்குடி அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொள்ள ஓ எஸ் மணியன், மாவட்ட கவுன்சிலர் இளவரசி, தலைஞாயிறு பேரூராட்சி துணை தலைவர் கதிரவன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜாரத்தினம் உள்பட பலர் 3,55 மணிக்கு தாசில்தார் அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் 4 மணி 40 நிமிடங்கள் ஆகியும் தாசில்தார் உள்ளிட்ட எந்த அதிகாரியும் வராததால் 1 மணி நேரம் காத்திருந்து விட்டு அலுவலகத்தை விட்டு ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்தார். ஓ எஸ் மணியன் எம்.எல்.ஏ. சென்றபிறகு தாசில்தார் ரவிச்சந்திரன் மட்டும் அங்கு வந்தார். பின்னர் அவர் எம்.எல்.ஏ. வை தொலைபேசியில் தொடர்புகொண்டு பொதுப்பணிதுறை ஆக்கிரமிப்பு பணியில் இருந்ததால் குறித்த நேரத்திற்கு வர முடியவில்லை என்று கூறினாார். அதிகாரிகள் வராததால் கூட்டததில் இருந்து ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ வெளியே சென்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story