பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் ஜிம் மாஸ்டர் குண்டர் சட்டத்தில் கைது
பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் ஜிம் மாஸ்டரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தர்மபுரி போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:
பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் ஜிம் மாஸ்டரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தர்மபுரி போலீசார் கைது செய்தனர்.
மாணவி கடத்தல்
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 25). ஏற்கனவே திருமணமான இவர் கர்நாடக மாநிலம் பொம்மனஅள்ளியில் வசித்து வந்தார். ஜிம் மாஸ்டரான இவர் தர்மபுரியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நரசிம்மனை தர்மபுரி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசாரிடம் சிக்காமல் இருசக்கர வாகனத்திலேயே சிறுமியை பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்து சென்ற அவர் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து மாணவியுடன் உல்லாசமாக இருந்தார். இதனால் அந்த மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குண்டர் சட்டத்தில் கைது
இந்தநிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்து நிரந்தரமாக எங்கும் தங்காமல் நரசிம்மன் பச்சிளம் குழந்தை மற்றும் மாணவியுடன் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த அவரை கடந்த ஜனவரி மாதம் தர்மபுரி போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவி மற்றும் பச்சிளம் குழந்தையை போலீசார் மீட்டனர்.
இதையடுத்து நரசிம்மனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவுபடி நரசிம்மன் குண்டர் சட்டத்தின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story