தி.மு.க. குறித்த அண்ணாமலையின் குற்றச்சாட்டினை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது
தி.மு.க. குறித்த அண்ணாமலையின் குற்றச்சாட்டினை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது என்று செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
தி.மு.க. குறித்த அண்ணாமலையின் குற்றச்சாட்டினை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது என்று செல்லூர் ராஜூ கூறினார்.
அரைத்த மாவு
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழமாத்தூர் பகுதியில்ரூ.15 லட்சம் செலவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரூ.6 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை, ரூ.12 லட்சம் செலவில் சுகாதார வளாகம் ஆகியவை கட்டும் பணிகளை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை பெற முதல்-அமைச்சர் வெளிநாடு செல்வது வழக்கமான ஒன்று தான். முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். அதன் மூலம் அவர், தமிழகத்திற்கு அதிகப்படியான முதலீட்டை கொண்டு வந்தார்.
மேலும் தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். அதன்காரணமாக கொேரானா காலத்திலும் தமிழகத்தின் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடையாமல் எடப்பாடி பழனிசாமி பார்த்துக்கொண்டார்.
அதே போல் தற்போது பட்ஜெட் முடிந்தவுடன் தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ள தமிழக முதல்-அமைச்சரின் பயணம் வெற்றியடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தி.மு.க. அரசின் பட்ஜெட், அரைத்த மாவையே அரைத்த பட்ஜெட் ஆக உள்ளது. எதுவுமே புதிதாக இல்லாத பட்ஜெட்.
இந்த பட்ஜெட்டால் அம்மா உணவகத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் உள்ளது. அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை, ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை முடக்க நினைப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்.
சித்திரை திருவிழா
அ.தி.மு.க. கொண்டு வந்த பெண்கள் நல திட்டங்களை நசுக்குவது, பெரியாரின் கொள்கையை குழி தோண்டி புதைப்பது போல் ஆகும். பட்ஜெட்டில் யானையை எதிர்பார்த்த மக்களுக்கு பூனை கூட கிடைக்கவில்லை.
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. குறித்து கூறும் குற்றச்சாட்டுகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர் சொல்லும் குற்றச்சாட்டில் அர்த்தம் இருக்கிறது. கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் வைகை அணையில் தண்ணீர் உள்ளது. எனவே கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது அரசு ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும். சித்திரை திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும். மக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் ரவுடிகள் தொல்லை உள்ளதாக டி.ஜி.பி.யே கூறியிருக்கிறார். சித்திரை திருவிழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் வர உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் மாணவிகள் மதுகுடிக்கும் நிலை வந்து விட்டது. அதனை கனிமொழியிடம் போய் சொல்லுங்கள். மதுக்கடைகளை அடைப்போம் என கூறினார். ஆனால் சொன்னப்படி செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.62 ஆயிரம் கோடி டெபாசிட் தொகையை உயர்த்தி காண்பித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story