மீன்பிடி திருவிழா
திருவாதவூரில் நடந்த மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை பிடித்தனர்.
மேலூர்,
திருவாதவூரில் நடந்த மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் போட்டிபோட்டு மீன்களை பிடித்தனர்.
பழமையான கண்மாய்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாணிக்கவாசகர் பிறந்த இடமான திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் கோவில் அருகில் விஷ்ணு தீர்த்தம் என்று அழைக்கப்படும் பெரிய கண்மாய் அமைந்துள்ளது. சுமார் 250 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் பாண்டியர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான கண்மாய் ஆகும்.
பல நூறு ஆண்டுகளாக இந்த கண்மாயில் மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மீன்பிடி திருவிழாவிற்கு தடை விதிக்கப் பட்டு இருந்த போதிலும் கிராம மக்கள் தடையை மீறி இந்த கண்மாயில் இறங்கி மீன் பிடித்ததும், அவ்வாறு மீன் பிடித்தவர்கள் மீது மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மீன்களுக்கு பூஜை
இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா எவ்வித தடையும் இன்றி வழக்கம்போல் சிறப்பாக நடைபெற்றது. புண்ணிய தீர்த்தமாக கருதப்படக்கூடிய இந்த பெரிய கண்மாயில் மீன்களை பிடித்துச் சென்று தங்களது இல்லங்களில் வைத்து பூஜை செய்தால் குடும்பம் சிறப்பு பெறும் என்பது இந்த பகுதி மக்களின் ஐதீகமாகும்.
நேற்று நடைபெற்ற மீன்பிடி விழா தேதி குறித்து சில நாட்களுக்கு முன்பாகவே தென்மாவட்டங்களில் சமூக வலைதளங்கள் மூலமாக செய்தி பரவியது.
பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நள்ளிரவு முதலே இருசக்கர வாகனங்கள் மற்றும் வேன் உட்பட ஏராளமான வாகனங்கள் மூலம் திருவாதவூர் வந்து பெரியகண்மாய் கரையில் குவிந்தனர்.
நேற்று அதிகாலை 5 மணி அளவில் கிராம அம்பலகாரர்கள் பாரம்பரிய வழக்கப்படி கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். கண்மாய் தண்ணீரில் இருந்த நாட்டு வகை மீன்களான விரால், சிலேபி, கட்லா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை வலை, கச்சா, ஊத்தா உட்பட பல்வேறு வகையான வலைகளை பயன்படுத்தி பொதுமக்கள் மீன்களை பிடித்தனர்.
ஆன்மிக நம்பிக்கை
முன்னொரு காலத்தில் ஒரு ஊரை சேர்ந்த தம்பதியர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் பிரிவு ஏற்பட்டு தாய் வீட்டிற்கு மனைவி சென்றதாகவும், இந்த கண்மாயில் அப்போது நடந்த மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற அந்த பெண் அவரது கணவனை சந்தித்ததால் இருவரும் மீண்டும் குடும்ப வாழ்க்கையில் இணைந்ததாகவும் எனவே இங்கு மீன்பிடித்தால் குடும்ப வாழ்க்கை சிறப்படையும் என இப்பகுதி மக்களின் ஆன்மிக நம்பிக்கையாக இருந்துவருகிறது. நேற்று நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று மீன்களைப் பிடித்துச் சென்று வீடுகளில் சமைத்து சாமிக்கு படையலிட்டு குடும்பத்தின ருடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story