பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
விருத்தாசலம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என வியாபாரிகளுக்கு, நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
விருத்தாசலம்,
விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு நகராட்சி ஆணையாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்தும், அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்தும் வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுபடி அனைவரும் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உடனடியாக வியாபாரிகள் அனைவரும் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கால அவகாசம்
அப்போது வியாபாரிகள் பலர் தாங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளை காண்பித்து, அதில் எந்தெந்த பைகளை பயன்படுத்துவது, எந்தெந்த பைகளை பயன்படுத்தக்கூடாது என அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் திடீரென பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்றால், நாங்கள் வியாபாரம் செய்ய முடியாத நிலைமை ஏற்படும். அதனால் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என வியாபாரிகள் கூறினர். அதற்கு ஆணையாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், உடனடியாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அதற்கு அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
இதில் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்க தலைவர் சண்முகம், செயலாளர் வாசு.சுந்தரேசன், ஜெய்சங்கர் சீனிவாசன், மணிவண்ணன், பிரபு, சவுந்தரராஜ், ஜெகன், பாஸ்கர், கண்ணன், சேட்டு முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story