இரவு பணியில் டாக்டர்கள் இல்லாதது குறித்து புகார்: கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அதிகாரி விசாரணை
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் இரவு பணியில் டாக்டர்கள் இல்லாதது குறித்த புகாரின் பேரில் மாவட்ட மருத்துவ அதிகாரி பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.
கறம்பக்குடி:
அரசு மருத்துவமனை
கறம்பக்குடியில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக 30 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருகிறது. ஆனால் மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. இடவசதி இன்மையால் பல மருத்துவ உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு செவிலியர்களே சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அமைச்சருக்கு புகார் மனு
இந்நிலையில் கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன்விடுதியை சேர்ந்த சேதுமாதவன் என்ற வாலிபர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவசர சிகிச்சைக்காக கறம்பக்குடி மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு டாக்டர்கள் பணியில் இல்லை. 2 செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.
இதுகுறித்து அவர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு புகார் மனு அனுப்பினார். இதையடுத்து மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனர் உத்தரவின்பேரில், புதுக்கோட்டை மருத்துவ நல பணிகள் இணை இயக்குனர் ராமு இன்று கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சமூகநல அமைப்பை சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கூறினர்.
கோரிக்கை
மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் டாக்டர்களை பணி அமர்த்த வேண்டும், 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்கும் வகையில் சுழற்சிமுறையை நடைமுறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும். கூடுதல் செவிலியர்களை நியமிக்க வேண்டும். கூடுதல் கட்டிடம் மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் அதிகாரி உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story