மூலப்பொருட்கள் விலை உயர்வால் கரூரில் அட்டைப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம்
மூலப்பொருட்கள் விலை உயர்வால் கரூரில் அட்டைப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
கரூர்,
அட்டைப்பெட்டி
கரூரில் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி தொழிலுக்கு அட்டைப்பெட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், கண்ணாடி பொருட்கள், எலெக்ட்ரானிக் உபகரணங்கள், ஆடைகள் உள்பட பெரும்பாலான பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு பத்திரமாக கொண்டு செல்ல அட்டைப்பெட்டிகளே உதவுகின்றன. இவற்றின் எடை குறைவு என்பதுடன், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இருக்கும் இந்த அட்டைப்பெட்டிகளை எளிதாக மறுசுழற்சி செய்யலாம்.
கரூர் மாவட்டத்தில் சுமார் 60 அட்டைப்பெட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அட்டைப்பெட்டிகளின் தேவை அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டே இருக்கும்.
மூலப்பொருட்கள் விலை உயர்வு
இந்தநிலையில் சமீபகாலமாக அட்டைப்பெட்டி தயாரிப்புக்கு மூலப்பொருளாக விளங்கும் கிராப்ட் காகிதத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கிராப்ட் காகிதத்தின் தட்டுப்பாடும் அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்பு வரை 1 டன் கிராப்ட் காகிதம் ரூ.22 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரை இருந்தது. தற்போது இருமடங்கு விலை அதிகரித்து உள்ளது.
வெளிநாட்டில் இருந்து வரும் கழிவு காகிதம் வரி, ரசாயனம், கப்பல் போக்குவரத்து சரியாக இல்லாததாலும், கன்டெய்னர் வாடகை உயர்வு உள்ளிட்டவைகளால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
வேலை இழக்கும் அபாயம்
கரூரில் தயாரிக்கப்படும் வீட்டு உபயோக ஜவுளிகள் அட்டைப்பெட்டிகளில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்காரணமாக அட்டைப்பெட்டிகளுக்கு ஆர்டர்கள் அதிகளவில் வந்து கொண்டிருந்ததால், அட்டைப்பெட்டி நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு வேலை இருந்து கொண்டே இருந்தது. இந்தநிலையில் விலை கணிசமாக உயர்ந்து உள்ளதால் ஆர்டர்கள் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் கிராப்ட் காகிதத்தின் விலை அதிகரித்து வருவதாலும், மூலப்பொருட்களின் பற்றாக்குறையாலும் அட்டைப்பெட்டிகளின் விலையும் அதிகரித்து உள்ளது. இதனால் பேக்கிங்குக்கு அட்டைப்பெட்டியை பயன்படுத்தி வந்தவர்கள், அட்டைப்பெட்டியை பயன்படுத்தாமல் மாற்றுவழிக்கு சென்றுவிட்டனர்.
உதாரணமாக தண்ணீர் பாட்டில்களை அட்டைப்பெட்டியில் பேக்கிங் செய்தனர். தற்போது அட்டைப்பெட்டி விலை அதிகரித்து விட்டதால், பாலீத்தின் கவரை பயன்படுத்துகின்றனர். இதேபோன்று பலர் அட்டைப்பெட்டிகளை தவிர்த்து மாற்றுவழிகளுக்கு சென்று கொண்டு உள்ளனர். இதனால் அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனங்களில் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் வகையிலேயே ஆர்டர்கள் இருக்கிறது.
இதனால் இந்த தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அட்டைப்பெட்டி உற்பத்தி தொழில் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
இதுகுறித்து அட்டைப்பெட்டி தயாரிப்பாளர்கள் கூறியதாவது:- நாம் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பொருட்கள் எதுவாக இருப்பினும், பேக்கிங் செய்யும் முறையை வைத்தே அந்த பொருளுக்கான தரமும் மதிப்பும் நிர்ணயிக்கப்படுகிறது. எனவேதான், ஒரு பொருளின் உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 5 சதவீதம் தொகையை பேக்கிங் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் தொழில் துறையினர்.
கரூரில் உள்ள அட்டைப்பெட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை அட்டைப்பெட்டிகளை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு லட்சக்கணக்கில் வரி வருவாய் கிடைக்கிறது.
கொரோனா தொற்றுக்கு முன் 1 டன் கிராப்ட் காகிதத்தின் விலை ரூ.22 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரை இருந்தது. தற்போது ரூ.46 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரம் வரை விலை உயர்ந்து உள்ளது. இதனால் எங்களுக்கு ஆர்டர்கள் குறைந்த அளவிலேயே உள்ளது. மூலப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஆகிய 2 காரணங்களால் தொழில் முழுமையாக நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க முடியாத நிலை உள்ளது.
வரி உயர்வு
அக்டோபர் மாதத்திற்கு பிறகு அட்டைப்பெட்டி விற்பனை செய்வதற்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கள் வாங்கும் மூலப்பொருள் வரி 12 சதவீதம் கட்டுவது 18 சதவீதம். இதனால் எங்களுக்கு தேவையில்லாமல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்கள் அட்டைப்பெட்டி உற்பத்தி செய்வது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிறுவனம் நடத்துவதே சிரமமாக உள்ளது.
கரூரில் உள்ள அனைத்து அட்டைப்பெட்டி நிறுவனங்களும், கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதியை நம்பித்தான் உள்ளது. தற்போது அவர்களும் பல்வேறு சிரமங்களில் உள்ளனர். அட்டைப்பெட்டி விலை உயர்வு அவர்களையும் பாதிக்கிறது. மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து இந்த தொழில் ஈடுபட்டுள்ளவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அட்டைப்பெட்டி தயாரிப்பது எப்படி?
கிராப்ட் காகிதம் ரோலாக வருகிறது. 2 ரோல்களை கார்கேசன் எந்திரத்தில் ஏற்றி அதை கார்கேட்டர் சீட்டாக மாற்றப்படுகிறது. அந்த சீட்டினை பேஸ்டிங் எந்திரத்தில் பேஸ்டிங் செய்து, அதில் 3, 5, 7, 9 உள்ளிட்ட பல்வேறு லேயர்களில் செய்து, கிரிஸ் மிசினில் கிரிசிங் லைன் வந்து, கட்டிங் செய்து பிரிண்டிங் செய்யப்படுகிறது. அதன்பிறகு பின் அடித்து அட்டைப்பெட்டியாக மாறுகிறது.
Related Tags :
Next Story