மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து தந்தை-மகள் பலி


மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து தந்தை-மகள் பலி
x
தினத்தந்தி 26 March 2022 6:39 PM GMT (Updated: 26 March 2022 6:39 PM GMT)

வீட்டிற்குள் சார்ஜ் போட்டு தூங்கியபோது மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி தந்தை-மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர்





வீட்டிற்குள் சார்ஜ் போட்டு தூங்கியபோது மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி தந்தை-மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மின்சார ஸ்கூட்டர்

வேலூர் சின்னஅல்லாபுரம் பலராமன் தெருவை சேர்ந்தவர் துரைவர்மா (வயது 49), வேலூர் டோல்கேட் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் மகள் மோகனபிரீத்தி (13), மகன் அவினாஷ் (10) ஆகியோருடன் வசித்து வந்தார். 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள பாட்டியின் வீட்டில் மோகனபிரீத்தி தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். அவினாஷ் வேலூரில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். மோகனபிரீத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வேலூரில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்திருந்தாள்.

துரைவர்மா ஒரு மோட்டார் சைக்கிள் வைத்திருந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதிதாக மின்சார ஸ்கூட்டர் (எலக்ட்ரிக் ஸ்கூட்டர்) ஒன்றும் வாங்கினார். 

தனது வீட்டின் முன்பகுதியில் போதிய இடமில்லாததால், இரவுவேளையில் வீட்டிற்குள் மின்சார ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பேட்டரியை கழற்றாமல் அப்படியே வண்டியில் பொருத்தப்பட்டிருந்த நிலையில் சார்ஜ் போடுவது வழக்கம்.

பேட்டரிக்கு சார்ஜ்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுவன் அவினாஷ் அதே தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு தூங்க சென்றான். துரைவர்மாவும், மோகனபிரீத்தியும் வீட்டின் உள்ளே அறையில் படுத்து உறங்கினர். முன்னதாக வழக்கம்போல் மின்சார ஸ்கூட்டரின் பேட்டரிக்கு துரைவர்மா மின்இணைப்பு கொடுத்துள்ளார்.

தொடர்ந்து சார்ஜ் ஏறிக்கொண்டிருந்ததால் பேட்டரி அதிகளவு சூடானதாக தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிரவு திடீரென மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியது. அதனால் மின்சார ஸ்கூட்டர் மற்றும் அதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிய தொடங்கின. 

பேட்டரி வெடித்த சத்தம் கேட்டு கண்விழித்த துரைவர்மா அறையின் கதவை திறந்து எட்டிப் பார்த்தார். அங்கு மின்சார ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் இரண்டும்  எரிந்து கொண்டிருந்தன.

கழிவறைக்குள் தஞ்சம்

அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மகளுடன் வீட்டை விட்டு வெளியே வர முயன்றார். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் வெளியேற முடியவில்லை.

 அதையடுத்து இருவரும் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். நள்ளிரவு நேரம் என்பதால் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் அயர்ந்து தூங்கிவிட்டதால் யாருக்கும் அவர்களது அபயகுரல் கேட்கவில்லை.

இதற்கிடையே மின்வயர்கள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. அதனால் வீடு முழுவதும் புகை சூழ்ந்தது. மேலும் வீட்டின் மின்சாரமும் திடீரென தடைப்பட்டது. புகைமூட்டத்தால் தந்தையும், மகளும் தொடர்ந்து சுவாசிக்க முடியாமல் திணறினர்.

அதையடுத்து அவர்கள் வீட்டினுள் உள்ள கழிவறைக்குள் சென்று தஞ்சம் அடைந்தனர். கரும்புகை ஜன்னல் வழியாக வீட்டிற்குள் வந்ததை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்புத்துறையினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

தந்தை-மகள் பலி

தகவல் அறிந்ததும் வேலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் மின்சார ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. 

பின்னர் தீயணைப்பு வீரர்கள் வீட்டின் உள்ளே சென்று கழிவறையில் மயங்கி கிடந்த தந்தை, மகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 2 பேரும் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதையடுத்து அவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மின்சார ஸ்கூட்டர் பேட்டரிக்கு நீண்டநேரம் சார்ஜ் போட்டதால் பேட்டரி வெடித்து ஏற்பட்ட புகை மூட்டத்தால் தந்தையும், மகளும் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story