பரமத்திவேலூரில் நிதி நிறுவன உரிமையாளர் கொலை முயற்சி வழக்கில் கள்ளக்காதலன் கைது பரபரப்பு வாக்குமூலம்
பரமத்திவேலூரில் நிதி நிறுவன உரிமையாளர் கொலை முயற்சி வழக்கில் கள்ளக்காதலன் கைது பரபரப்பு வாக்குமூலம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் நிதிநிறுவன உரிமையாளர் கொலை முயற்சி வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நிதி நிறுவன உரிமையாளர்
பரமத்திவேலூர் சண்முகா நகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). நிதி நிறுவன உரிமையாளர். இவரது மனைவி கிருத்திகா (36). நடராஜன் தனது பொக்லைன் எந்திரங்களை கோபால் (35) என்பவரை வைத்து மேற்பார்வை பார்த்து வந்தார். இதில் கோபாலுக்கும் நடராஜன் மனைவி கிருத்திகாவுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதை கண்டித்த நடராஜனை கிருத்திகாவும் கள்ளக்காதலன் கோபாலும் சேர்ந்து கொலை செய்ய முடிவு செய்தனர்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த நடராஜனை மர்ம நபர் ஒருவர் தாக்கி அரிவாளால் வெட்டினார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அருகில் இருந்தவர்கள் நடராஜனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடராஜனை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்ற மர்ம நபரை பிடித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கள்ளத்தொடர்பு
போலீசார் நடத்திய விசாரணையில் திருச்செங்கோடு அருகே உள்ள சித்தளந்தூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் யோகேஸ்வரன் (29) என்பதும், சித்தளந்தூரில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நடராஜனின் மனைவி கிருத்திகாவுக்கும், நடராஜனிடம் வேலை பார்த்த கோபாலும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதை தட்டிக்கேட்ட நடராஜனை கொலை செய்வதற்காக தன்னை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து கிருத்திகாவையும், யோகேஸ்வரனையும் போலீசார் கைது செய்து தலைமறைவான கோபாலை பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையிலான போலீசார் நேற்று பாண்டமங்கலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.. அப்போது அவ்வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரனை நடத்தினர். அதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நடராஜனை கொலை செய்ய யோகேஸ்வரனை அனுப்பிய கோபால் என்பது தெரியவந்தது. இதையடுத்து கோபாலை கைது செய்தனர். பின்னர் கோபால் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், நடராஜனிடம் வேலை பார்த்த போது அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்தேன் அப்போது அவரது மனைவி கிருத்திகாவிற்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டதால் இருவரும் தனிமையில் சந்தித்து வந்தோம்.
கைது
இதையறிந்த நடராஜன் என்னை கண்டித்ததால் எங்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த நடராஜனை தீர்த்துக்கட்ட நானும் கிருத்திகாவும் முடிவு செய்தோம். இதுகுறித்து எனது நண்பர் யோகேஸ்வரனிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததையடுத்து வீட்டில் நடராஜன் மட்டும் தனியாக இருந்ததையறிந்து கிருத்திகாவை வெளியே எங்காவது சென்று விடுமாறு கூறி விட்டு ஒரு பையில் அரிவாளை மறைத்து வைத்து யோகேஸ்வரனை அனுப்பி வைத்தேன்.
ஆனால் அங்கு வீட்டில் தனியாக இருந்த நடராஜனை அரிவாளால் வெட்டிய போது சிக்கி கொண்டதால் நானும் போலீசாரிடம் சிக்கிக் கொள்வேன் என பயந்து தலைமறைவானேன். இருப்பினும் போலீசார் என்னை பிடித்து விட்டனர் என கூறினார். இதையடுத்து அவரை சிறையில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story