கரூரில் 3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கரூர் மாவட்டத்தில் 3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கரூர்,
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி கரூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி 3-வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. கரூர் தாலுகா தாந்தோணிமலை மற்றும் திருமாநிலையூர் பகுதிகளில் அமராவதி கிளை வாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடனும், கான்கிரீட் துளையிடும் கருவிகளைக்கொண்டும் அகற்றப்பட்டன.அமராவதி கிளை வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த இருசக்கர வாகன ஒர்க் ஷாப், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் கொண்டு கட்டப்பட்டிருந்த மாட்டுக்கொட்டகை, சுற்றுச்சுவர், குளியலறை போன்ற கட்டிடங்கள் என 1 ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. கரூர் ஆர்.டி.ஓ. பாலசுப்பிரமணியன், தாசில்தார் பன்னீர்செல்வம், அமராவதி உதவி பொறியாளர் ராஜகோபால் மற்றும் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி தாலுகாவில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நங்காஞ்சி ஆறு, குடகனாறு, அமராவதி ஆறு மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஓடை, வாரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் வேலி அடைத்து, வாய்க்கால் வெட்டி, குப்பைக்குழிகள் அமைத்து, உழவடை செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அரவக்குறிச்சி தாசில்தார் ராஜசேகரன், அமராவதி வடிநில உபகோட்ட உதவி பொறியாளர் சீனிவாசன், அரவக்குறிச்சி மண்டல துணை தாசில்தார் குமரேசன், வருவாய் ஆய்வாளர் சுரேஷ், நாகம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சாமியாத்தாள் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மேலும் அரவக்குறிச்சி தாலுகாவில் மேற்கண்ட நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிக் கொள்ளுமாறும் தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நச்சலூர்
நச்சலூர் அருகே உள்ள முதலைப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான வடிகால் வாரி 7½ ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்து பூக்கள், நெல், உளுந்து உள்ளிட்டவைகள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருஞானம், நங்கவரம் வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி, முதலைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமித்து பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
Related Tags :
Next Story