கீரமங்கலம் பகுதியில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் பட்டா நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் அகற்றப்பட்டதால் சாலை மறியல்


கீரமங்கலம் பகுதியில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் பட்டா நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் அகற்றப்பட்டதால் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 March 2022 12:27 AM IST (Updated: 27 March 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலம் பெரியாத்தாள் ஏரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இதில் பட்டா நிலத்தில் உள்ள தென்னை மரங்களும் அகற்றப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கீரமங்கலம்:
ஆக்கிரமிப்பு அகற்றம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், நகரம், சேந்தன்குடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியுள்ள சுமார் 400 ஏக்கர் பரப்பளவுள்ள பெரியாத்தாள் ஏரி சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாரிகளின் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நீரின்றி அமையாது உலகு அமைப்பின் தலைவர் ராஜேந்திர சேதுபதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
நீதிமன்ற உத்தரவுப்படி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முதல்கட்டமாக அளவீடு செய்து அடையாள கல் நட்டதுடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றத் தொடங்கியுள்ளனர். அதாவது கடலை, சோளம், தென்னை, பலா, தைலமரங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு வருகிறது.
சாய்க்கப்பட்ட தென்னை மரங்கள்
நேற்று 2-வது நாளாக ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி, துணை வட்டாட்சியர் பழனியப்பன் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்தது. மாலையில் மணிவா பாலு என்ற விவசாயிக்கு சொந்தமான பட்டா நிலத்தில் நின்ற 10 தென்னை மரங்களும் சாய்க்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
பட்டா நிலத்தில் உள்ள மரங்களை சாய்த்ததை கண்டித்து மணிவாபாலு உள்ளிட்டோர் கீரமங்கலம் - கொத்தமங்கலம் சாலையில் சேந்தன்குடி செக்போஸ்ட் பஸ் நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியாக சென்ற பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டது. 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் செந்தில்நாயகி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் பேச்சுவார் த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள் உத்தரவின்றி பட்டா நிலத்தில் நின்ற மரங்களை அகற்றிய பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்வதுடன் பொக்லைன் டிரைவரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன் பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story