ஆசிரியையை கத்தியால் வெட்டிய மாணவன்


ஆசிரியையை கத்தியால் வெட்டிய மாணவன்
x
தினத்தந்தி 27 March 2022 12:46 AM IST (Updated: 27 March 2022 12:46 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் ஆசிரியையை கத்தியால் மாணவன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் காட்டுக்கூடலூர் ரோடு, திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் சரவணகுமார். இவருடைய  மனைவி ரேகா (வயது 42). இவர் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பள்ளிக்கூடத்தின் அருகிலேயே வீடு இருப்பதால், ரேகா தினசரி பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்வது வழக்கம். 

அந்த வகையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடத்திற்கு சென்ற ரேகா, மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றார். பின்னர் சாப்பிட்டு முடித்ததும், வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது அப்பகுதியில் பள்ளி சீருடையில் பதுங்கி இருந்த 18 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவன், திடீரென தான் கையில் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் நடுரோட்டில் வைத்து ரேகாவின் தலையில் வெட்டினான். இதில் வலி தாங்க முடியாமல் ரேகா கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

அதற்குள் அந்த மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதையடுத்து பொதுமக்கள், காயமடைந்த ஆசிரியை ரேகாவை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், அவனை வலைவீசி தேடி வருகின்றனர்.இதற்கிடையே ஆசிரியை ரேகா கூறுகையில், தன்னை தாக்கிய மாணவன் பள்ளி சீருடை போல், நீல நிற கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தான். 18 முதல் 20 வயதுக்குள் இருக்கும். ஆனால் எங்கள் பள்ளி மாணவன் போல் தெரியவில்லை என்றார். அரசு பள்ளி ஆசிரியையை மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story