இளைஞர்களை போட்டித்தேர்வுக்கு ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி


இளைஞர்களை போட்டித்தேர்வுக்கு ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 27 March 2022 1:17 AM IST (Updated: 27 March 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

ஏலகிரிமலையில் இளைஞர்களை போட்டித்தேர்வுக்கு ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்று பேசினார்.

ஜோலார்பேட்டை

ஏலகிரிமலையில் இளைஞர்களை போட்டித்தேர்வுக்கு ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்று பேசினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மலைவாழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை அரசு, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். ஆனால் உயர் கல்வி பயில்வதற்கு ஒரு சிலர் மட்டுமே செல்கின்றனர். 

அவ்வாறு உயர்கல்வி படிப்பு முடித்தவர்கள் வேலை வாய்ப்பின்றி பின்தங்கி, விவசாயத் தொழில், ஒரு சிலர் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் நிலையை ஏற்படுத்தி கொள்கின்றனர். இதனால் இளைஞர்களிடையே தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும், இளைஞர்களை போட்டித்தேர்வுக்கு ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏலகிரிமலையில் உள்ள நிலாவூர் கிராமத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி ‘காவலர் மற்றும் இளைஞர்கள் நல்லுறவு’ என்ற தலைப்பில் பேசினார்.

அவர் பேசியதாவது:-

சாதித்து வெற்றி பெற வேண்டும்

ஏலகிரிமலையில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், திருமணமானவர்கள் என அனைவரும் படித்துவிட்டு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என வருந்தாமல் அரசு அறிவிக்கும் அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொண்டு மன உறுதியுடனும், தைரியத்துடனும் பங்கேற்று சாதித்து வெற்றி பெற வேண்டும். 
மனம் தளராமல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது வளர்ச்சியை உருவாக்கும். ஏலகிரிமலையில் வரும்காலங்களில் படித்த இளைஞர்கள் முக்கிய வல்லுனர்களாக வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

புத்தகங்கள்

நிகழ்ச்சியில் பங்கேற்ற 25 பேருக்கு போட்டித்தேர்வுக்கான புத்தகங்களை போலீஸ் சூப்பிரண்டு இலவசமாக வழங்கினார். 
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், ஏலகிரிமலை சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிலாவூர் ஊர் பொதுமக்கள் பாரம்பரிய கலைகள் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை வரவேற்றனர். 

Next Story