கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 27 March 2022 2:05 AM IST (Updated: 27 March 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

கொல்லங்கோடு, 
கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா
கொல்லங்கோடு பத்திரகாளியம்மன்கோவில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். தமிழக-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மீன பரணி நாளில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேவஸ்தான தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை கொடியேற்றி வைத்தார்.
முன்னதாக நேற்று காலை 8 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து அம்மன்கள் எழுந்தருளி பதிவரிசனையின் படி கிணறு வலம் வைத்து ஊர்வலமாக சாஸ்தாநகர், திருமன்னம் பகுதிகளுக்கு சென்று மதியம் மீண்டும் மூலக்கோவில் வந்தடைந்தது. அதை தொடர்ந்து சமூக விருந்தில் கலந்து விட்டு 3 மணிக்கு அம்மன்கள் திருவிழா கோவிலான வெங்கஞ்சி கோவிலுக்கு மேளதாளங்களுடன் தாலப்பொலி, யானை உள்ளிட்ட ஊர்வலங்களுடன் கண்ணனாகம் சந்திப்பு, இளம்பாலமுக்கு வழியாக 7 மணிக்கு வந்தடைந்தது. இதனை தொடர்ந்து அங்கு கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக கவர்னர் பங்கேற்பு
இரவு 8 மணிக்கு தூக்க திருவிழா நிகழ்ச்சியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கோவில் தலைவர் ராமச்சந்திரன் நாயர் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார். விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்தி பேசினார். கோவில் பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி நன்றி கூறினார். இதில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.,கோவில் துணை தலைவர் சதி குமாரன் நாயர், இணை செயலாளர் பிஜு குமார், பிரதிநிதி சபை குழு உறுப்பினர்கள் சஜி குமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன் தம்பி, ஸ்ரீகுமாரன் நாயர், பிஜூ, சதி குமாரன் நாயர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் தூக்க நேர்ச்சை வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதில் ஏராளமான பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சிறப்பு பஸ்கள்
கொடியேற்ற நிகழ்ச்சியை காண தமிழக, கேரள அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் அவசர உதவி மருத்துவ சிகிச்சை வழங்கவும் கொல்லங்கோடு நகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
முன்னதாக குமரி மாவட்டத்திற்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து கலெக்டர் அரவிந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

Next Story