கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே ஓராண்டில் ரூ.37 கோடியில் கண்ணாடி நடை பாலம் ;அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே ஓராண்டில் ரூ.37 கோடியில் கண்ணாடி நடை மேடையுடன் கூடிய பாலம் அமைக்கப்படுகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே ஓராண்டில் ரூ.37 கோடியில் கண்ணாடி நடை மேடையுடன் கூடிய பாலம் அமைக்கப்படுகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
அமைச்சர் ஆய்வு
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை உள்ளது. விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் அதை பார்த்து முடித்து விட்டு மீண்டும் படகில் ஏறி திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிடுவது வழக்கம்.
சில நேரங்களில் கடலில் ஏற்படும் நீரோட்ட மாற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவது உண்டு. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை அருகே சென்று ரசிக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே, விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாளாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு சுற்றுலா பயணிகள் நடந்து சென்று பார்வையிட வசதியாக கண்ணாடியால் ஆன நடைமேடையுடன் பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமரிக்கு வந்து இருந்தார். அவர் நேற்று பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்குச் சென்று பாலம் அமைய உள்ள பகுதியை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொருளாதார விரயம்
கன்னியாகுமரி என்பது இந்தியாவுக்கு புகழ் சேர்க்கிற ஒரு சுற்றுலா மையம். இங்கு ஏற்கனவே கடலில் உள்ள ஒரு பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது மற்றொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையை அமைத்தார்.
சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்துவிட்டு, மீண்டும் படகில் ஏறி திருவள்ளுவர் சிலையை பார்த்துவிட்டு போகிற நிலைதான் இருக்கிறது. இதன்மூலமாக படகின் காலம் நேரம், படகை இயக்குவதற்கான செலவு அதிகம். இதை கருத்தில் கொண்டு மத்திய- மாநில அரசுகள் ஒரு பாலம் அமைக்கலாம் என்று முடிவு செய்தன. அதன் அடிப்படையில் 140 மீட்டர் நீளத்திலும், 7.5 மீட்டர் அகலத்திலும் ஒரு பாலத்தை அமைக்கலாம் என்று கடந்த அரசு முடிவு செய்தது.
10 மீட்டர் அகலத்தில்...
கடந்த அரசு முடிவு செய்திருந்த பால வடிவமைப்பு 140 மீட்டர் நீளம் என்பது பொருளாதார விரயம் ஆகும் என்பது தெரிய வந்தது. விவேகானந்தர் பாறை முதல் திருவள்ளுவர் சிலையை இணைக்கக்கூடிய பாலத்தினை 72 மீட்டரில் இணைக்க முடியும். அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் சந்திரசேகர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக்குழு இந்த பாலத்தை 72 மீட்டரிலேயே அமைக்கலாம் என்ற பரிந்துரையை தந்தது.
அந்த பரிந்துரையை ஏற்று உடனே நான் ஐ.ஐ.டி.யினுடைய சம்பந்தப்பட்ட துறையின் தலைவரை அழைத்து, அவரோடு பேசி அவரையும் மீண்டும் இங்கே அனுப்பி அவருடைய ஒப்புதலைப் பெற்றோம். அவரும் ஒப்புதல் தந்துவிட்டார். அதன்பிறகு முதல்-அமைச்சரிடம் இந்த பரிந்துரைகளை எல்லாம் கொடுத்தோம். அவர் அலசி ஆராய்ந்து பார்த்து இந்த 72 மீட்டர் நீளத்தில் பாலத்தை அமைக்கலாம் என்று ஒப்புதல் அளித்துள்ளார். அதேநேரத்தில் அகலம் என்று பார்க்கிறபோது 10 மீட்டர் அகலம். ஏற்கனவே போடப்பட்ட திட்டத்தில் 7.5 மீட்டர்தான் இருந்தது. ஆனால் இந்த பாலம் 10 மீட்டர் அகலத்தில் அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
ஓராண்டுக்குள் முடிக்க திட்டம்
தமிழக முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தவேண்டும் என்ற கருத்தை சொன்னார். சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தில் நடந்து செல்கிறபோது, கீழே உள்ள கடல் அழகை அவர்கள் பார்த்து ரசித்துச் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் கடினமான கண்ணாடியால் ஆன நடைமேடை அமைத்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தையும் முதல்-அமைச்சர் தெரிவித்தார். அதனடிப்படையில் திட்ட மதிப்பீடு தயாரித்து டெண்டர் விடப்பட்டுள்ளது. பொதுவாக நெடுஞ்சாலைத்துறையில் 30 நாட்கள் கால அவகாசத்தில்தான் டெண்டர் விடுவார்கள். ஆனால் இந்த பணிக்கு 45 நாட்கள் கால அவகாசத்தில் டெண்டர் விட்டுள்ளோம். பாலம் அமைப்பதற்கான டெண்டர் முடிவுக்கு வந்த ஓராண்டிற்குள் இந்த பாலத்தினை முடிக்க வேண்டுமென்று தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இந்த பாலத்தை ஓராண்டுக்குள் கட்டி முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய முயற்சிகளை செய்வோம். டெண்டர் விட்டவுடன் கட்டாயம் விரைவாக இந்த பாலத்தை அமைப்போம். முதல்-அமைச்சர் இந்த பாலத்தை திறந்து வைப்பார். இந்த திட்டத்துக்கான வரைபடம் தயாராகி, முதல்-அமைச்சரிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
ரூ.37 கோடி திட்ட மதிப்பீடு
இந்த பாலம் பார்ப்பதற்கு தொங்கு பாலமாக தெரிந்தாலும், தொங்கு பாலமாக இருக்காது. பாலத்தின் தொடக்கம் மற்றும் முடிவு பகுதிகளில் உள்ள பாறைகளில் இரும்பு தூண்களை நிறுவி அதில்தான் பாலத்தை இணைப்போம். ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு கர்டரால்தான் பாலம் அமைத்திருப்பார்கள். அதேபோல் இரும்பு கர்டர்களால் வலுவான பாலமாக அமைக்கப்படும். இரவு நேரத்தில் பாலத்தில் கவர்ச்சிக்காக நவீன பல்வேறு வகையான வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பாலத்தின் திட்டமதிப்பீடு ரூ.37 கோடியாகும்.இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
பின்னர் அவர் பள்ளம் பகுதியில் கடலரிப்பால் பாதிப்புக்குள்ளான சாலையையும், தற்காலிக சீரமைப்பு பணியையும் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழையின்போது சேதமடைந்த தேரேகால்புதூர் பகுதியில் உள்ள சாலையில் தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் கட்டிட சீரமைப்பு பணி, ஆசாரிபள்ளம் அருகில் உள்ள பெருஞ்செல்வவிளை பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலையில் நடந்த தற்காலிக சீரமைப்பு பணி, பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவர் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரன் பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தலைமை பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சந்திரசேகர், தலைமைப்பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலைத்துறை) பாலமுருகன், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி பேரூராட்சித்தலைவர் குமரி ஸ்டீபன், அரசு குற்றவியல் கூடுதல் வக்கீல் மதியழகன், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அழகேசன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், மீனவரணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பசலியான், தாழக்குடி கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் இ.என்.சங்கர், தி.மு.க. நிர்வாகிகள் ஷேக்தாவூது, வக்கீல் மாதவன் முருகன், ஜீவா, குட்டிராஜன் மற்றும் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story