பொது வேலைநிறுத்தத்தையொட்டி 7 இடங்களில் மறியல் போராட்டம் தொழிற்சங்க நிர்வாகிகள் பேட்டி


பொது வேலைநிறுத்தத்தையொட்டி 7 இடங்களில் மறியல் போராட்டம் தொழிற்சங்க நிர்வாகிகள் பேட்டி
x
தினத்தந்தி 27 March 2022 2:23 AM IST (Updated: 27 March 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

பொது வேலைநிறுத்தத்தையொட்டி, நெல்லையில் 7 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்

நெல்லை:
நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தையொட்டி, நெல்லையில் 7 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நெல்லையில் தொ.மு.ச. கூட்டமைப்பு தலைவர் தர்மன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலைநிறுத்தம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களை முதலாளி வர்க்கத்துக்கு ஆதரவாக 4 தொகுப்புகளாக மாற்றிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சமாக மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்க கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும்.
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
மறியல்
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நெல்லை மாவட்டத்தில் நெல்லை, நாங்குநேரி, வள்ளியூர், விக்கிரமசிங்கபுரம், அம்பை, வீரவநல்லூர், முக்கூடல் ஆகிய 7 இடங்களில் நாளை சாலைமறியல் போராட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை மறுநாள் அதே 7 இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. எனவே 2 நாட்களும் நெல்லை மாவட்டத்தில் அரசு பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்போது ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சடையப்பன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு வக்கீல் ரமேஷ், கணேசன், டி.டி.எஸ்.எப். சந்தானம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு
பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதாக இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது. எனவே அந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் என்று நெல்லை மாவட்ட செயலாளர் பால்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Next Story