மூடிகெரேயில், காட்டு யானை தாக்கி பெண் சாவு மற்றொருவர் படுகாயம்


மூடிகெரேயில், காட்டு யானை தாக்கி பெண் சாவு மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 27 March 2022 2:35 AM IST (Updated: 27 March 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

மூடிகெரேயில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்

சிக்கமகளூரு: மூடிகெரேயில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

காட்டு யானை அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெேர தாலுகா ஆல்தூர் அருகே கெலகூர் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி தனியாருக்கு சொந்தமான காபி தோட்டம் அமைந்துள்ளது. இந்த காபி தோட்டத்தில் வெளிமாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். இதேபோல், விஜயநகர் மாவட்டம் ஹூவினஅடஹள்ளி தாலுகா தெம்பாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த சரோஜாபாய் (வயது 45) என்ற தொழிலாளியும் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். 

இந்த காபி தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி, தோட்டத்துக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் பீதியுடன் தான் வேலை பார்த்து வருகிறார்கள். 

பெண் தொழிலாளி சாவு

இந்த நிலையில் நேற்று காலை சரோஜாபாய், சக தொழிலாளர்களுடன் காபி தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி காபி தோட்டத்துக்குள் புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து அலறி அடித்து தப்பி ஓடினார்கள். அப்போது சரோஜா பாய், காட்டு யானையின் பிடியில் சிக்கிக் கொண்டார். 

அந்த யானை, சரோஜாபாயை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. பின்னர் காலால் அவரை மிதித்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மற்றொருவர் படுகாயம்

பின்னர் அந்த காட்டு யானை பக்கத்து தோட்டத்துக்கு சென்றது. அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த துர்கப்பா (38) என்பவரையும் தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து படுகாயமடைந்த துர்கப்பாவை சக தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் யானை தாக்கி பலியான சரோஜா பாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
 
கோரிக்கை
 
அப்போது அந்தப்பகுதியை சேர்ந்த மக்களும், காபி தோட்ட விவசாயிகளும் காட்டு யானை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பலியான தொழிலாளரின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

இதனை ஏற்று கொண்ட வனத்துறையினர், காட்டு யானையின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Next Story