ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் அதிசய பசு


ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் அதிசய பசு
x
தினத்தந்தி 27 March 2022 3:04 AM IST (Updated: 27 March 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டுக்குட்டிகளுக்கு பசு பால் கொடுக்கிறது.

தா.பழூர்:
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்ப்பால் மிகவும் அவசியம். தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்க்கும், கிடைக்காத குழந்தைக்கும் உள்ள பரிதவிப்பு சொற்களால் விவரிக்க முடியாதது. விலங்கினத்திற்கும் இது பொருந்தும். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ். ராணுவ வீரரான இவர் தற்போது பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் பணியாற்றி வருகிறார். கோடங்குடி கிராமத்தில் உள்ள இவரது வீட்டு தோட்டத்தில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகின்றனர். இதில் ஒரு ஆடு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 2 குட்டிகளை ஈன்றது. ஆனால் அந்த ஆட்டுக்குட்டிகளுக்கு கொடுக்கும் அளவிற்கு ஆட்டின் மடியில் பால் சுரக்கவில்லை. இதனால் ஆட்டுக்குட்டிகளின் நிலைமை பரிதாபத்திற்கு உரியதாக மாறியது. அதே வீட்டில் உள்ள பசு ஒன்று கன்று ஈன்ற நிலையில், பால் கறக்கப்பட்டு வருகிறது. மாட்டின் பாலை பீய்ச்சி பாட்டிலில் அடைத்து ஆட்டுக்குட்டிகளுக்கு புகட்டி வந்தனர். ஒரு சில நாட்கள் மட்டும் பாட்டிலில் பால் குடித்த ஆட்டுக்குட்டிகள், அதன்பின் நேரடியாக அந்த பசுவிடமே சென்று பால் குடிக்க தொடங்கின. பசுவும் ஆட்டுக்குட்டிகளை தன் குட்டிகள் போல் பாவித்து அவற்றுக்கு பால் ஊட்டுகிறது. பசுவின் கன்று அருகில் இருந்த போதிலும் ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுத்த பின்பே தனது கன்றுக்குட்டிக்கு பசு பால் கொடுக்கிறது. காண்பவரை நெகிழச்செய்யும் இந்த காட்சி தாய் உள்ளத்தின் உன்னதத்தை உணர்த்துவதாக உள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் தகவல் பரவியதையடுத்து அதிசய பசுவையும் ஆட்டுக்குட்டிகளையும் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

Next Story