காளைகளை உற்சாகமாக அடக்கிய வீரர்கள்


காளைகளை உற்சாகமாக அடக்கிய வீரர்கள்
x
தினத்தந்தி 27 March 2022 3:05 AM IST (Updated: 27 March 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டில் காளைகளை வீரர்கள் உற்சாகமாக அடக்கினர்.

வேப்பந்தட்டை:

ஜல்லிக்கட்டு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடி கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு முதல்நாளன்று திடீரென மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படாததால் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இதைத்தொடர்ந்து விழாக் குழுவினர் சாலை மறியல் போராட்டம், முற்றுகை போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முறையான அனுமதி வழங்கப்பட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 440 காளைகள் பங்கேற்றன. 256 வீரர்கள் களத்தில் இறங்கி மாடுகளை பிடித்தனர். முன்னதாக காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை கால்நடை மருத்துவர்களால் செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டது. அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதிக்கான மருத்துவ சான்றிதழ்களும், கொரோனா பரிசோதனை சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
பரிசுகள்
வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பாய்ந்து பிடிக்க முயன்றனர். அப்போது பார்வையாளர் மாடத்தில் இருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். பல காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினர். சில காளைகள், மாடுபிடி வீரர்களை கதிகலங்க செய்தன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சென்றன. இதைத்தொடர்ந்து பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் காளைகள் முட்டியதில் 14 மாடுபிடி வீரர்கள் உள்பட 37 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவ குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விசுவக்குடி ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரும்பாவூர் போலீசார் செய்திருந்தனர். பெரம்பலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.
கயிற்றில் சிக்கிய வீரர்கள்
ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட பெரும்பாலான காளைகளின் கழுத்துக் கயிற்றை அவிழ்க்காமல் அப்படியே விடுவித்தனர். இதனால் கால்களில் கயிறு சிக்கிக்கொள்ளுமோ? என்ற அச்சத்துடனேயே வீரர்கள் காளைகளை பிடிக்கும் நிலை இருந்தது. ஒரு சில வீரர்கள் கயிற்றில் சிக்கி காளைகளால் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு விழுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டின்போது மாடுபிடி வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் சில வீரர்கள் களத்தில் இருந்து வெளியேறாமல் உள்ளேயே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வீரர்களை லத்தியால் அடித்து அங்கிருந்து வெளியேற்றினார்.

Next Story