மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கவுன்சிலர் தேர்வு- ஆர்ப்பாட்டம் நடந்ததால் பரபரப்பு


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கவுன்சிலர் தேர்வு- ஆர்ப்பாட்டம் நடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 March 2022 10:20 PM GMT (Updated: 2022-03-27T03:50:37+05:30)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கவுன்சிலர் தேர்வு செய்யப்பட்டதால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தியூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கவுன்சிலர் தேர்வு செய்யப்பட்டதால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மறைமுக தேர்தல் தள்ளிவைப்பு
அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 13 வார்டுகளில் தி.மு.க. உறுப்பினர்கள் வெற்றி பெற்றார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ், சுயேச்சை தலா 1 வார்டிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றிபெற்றார்கள். 
அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவி கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தி.மு.க. ஒதுக்கி இருந்தது. ஆனால் மறைமுக தேர்தல் கடந்த 4-ந் தேதி நடைபெற்றபோது தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் ஓட்டுப்போட வரவில்லை. இதனால் தற்காலிகமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. 
முன்மொழியவில்லை
இந்தநிலையில் தேர்தல்ஆணையம் அறிவித்தபடி நேற்று காலை அந்தியூர் பேரூராட்சி தலைவர், துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் கீதா சேகர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் அவருக்கு முன்மொழியவில்லை. 
இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர் எம்.பாண்டியம்மாள் என்பவர் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரவு அளித்து ஓட்டுப்போட்டதால் அவர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 
கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் அந்தியூர் பேரூராட்சி தலைவர் பதவியை கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தி.மு.க. ஒதுக்கியது. ஆனால் கூட்டணி தர்மத்தை மீறி தி.மு.க. உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தி.மு.க. கவுன்சிலரை தலைவராக தேர்ந்து எடுத்து விட்டதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டனம் தெரிவித்தார்கள்.
மேலும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் கீதா சேகர் தலைமையில் கட்சியினர் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஈரோடு மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். 
சுமார் 30 நிமிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பின்னர் கலைந்து சென்றுவிட்டார்கள். 
துணைத்தலைவர் தேர்வு
இதேபோல் அந்தியூர் பேரூராட்சிக்கு துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று மதியம் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் போதுமான அளவில் கலந்துகொள்ளாததால் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. 
அந்தியூர் அடுத்துள்ள ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சிக்கான துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. பா.ம.க. கவுன்சிலர் கொமாரசாமியும். தி.மு.க. கவுன்சிலர் தங்கராசுவும் போட்டியிட்டார்கள். இதில் பா.ம.க கவுன்சிலர் கொமாரசாமி வெற்றிபெற்றார்.

Next Story