ஈரோட்டில் தீ விபத்து; நகை-பணம் எரிந்து நாசம்
ஈரோட்டில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நகை, பணம் எரிந்து நாசமானது.
ஈரோடு
ஈரோட்டில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நகை, பணம் எரிந்து நாசமானது.
தீ விபத்து
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன்நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் ஏசுராஜ். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுக்கு பிரபாகரன், தமிழரசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் தமிழரசன் வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். பிரபாகரன் தனது மனைவி புனிதவள்ளியுடன் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பிரபாகரன் ஈரோடு பஸ் நிலையம் அருகில் போட்டித்தேர்வுக்காக பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை பிரபாகரன் வெளியில் சென்றார். புனிதவள்ளி கீழே உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார். காலை 8.30 மணிஅளவில் பிரபாகரன் வீட்டில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஏசுராஜூவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து புனிதவள்ளி மேலே சென்று பார்த்தபோது வீடு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை.
நகை- பணம்
இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதல்கட்டமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து சுமார் 2 மணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், ரூபாய் நோட்டுகள், சுமார் 2 பவுன் நகை, கணினி, கட்டில், மெத்தை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story