வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்


வார விடுமுறையையொட்டி  பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்  4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
x
தினத்தந்தி 27 March 2022 4:26 PM IST (Updated: 27 March 2022 5:24 PM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பழனி:
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடி எடுத்து பழனிக்கு வந்தனர். திருவிழா முடிந்த பிறகும் தற்போது பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இன்று வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. குறிப்பாக திருஆவினன்குடி, பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில் ஆகிய இடங்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையங்களிலும் நீண்ட வரிசை காணப்பட்டது. இதனால் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் செல்லும் பாதைகள், கிரிவீதிகள் ஆகிய இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் கயிற்றால் ஆன விரிப்புகள் விரிக்கப்பட்டு தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story