தூத்துக்குடியில் பழமையான வரதவிநாயகர் கோவில் இடித்து அகற்றம்


தூத்துக்குடியில் பழமையான வரதவிநாயகர் கோவில் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 27 March 2022 4:53 PM IST (Updated: 27 March 2022 4:53 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பழமையான வரதவிநாயகர் கோவில் இடித்து அகற்றப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 75 ஆண்டுகள் பழமையான வரதவிநாயகர் கோவில் இடித்து அகற்றப்பட்டது. முன்னதாக  கோவிலில் கடைசியாக விநாயகருக்கு நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
வரதவிநாயகர் கோவில்
தூத்துக்குடி 2-ம் ரெயில்வே கேட் அருகே 75 ஆண்டுகள் பழமையான வரத விநாயகர் கோவில் இருந்தது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தி வந்தனர். இந்த நிலையில் 2-வது ரெயில் பாதை அமைப்பதற்காக அந்த கோவிலை அகற்ற ரெயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்தது.. இதைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்படி அந்த கோவிலை அகற்ற ரெயில்வே அதிகாரிகள் கடந்த 25-ந் தேதி வந்தனர். அப்போது, இந்து மக்கள் கட்சியினர், இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜனதா கட்சியினர் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கோவிலை உரிய ஆகம விதிகளின் படி பாலாலயம் செய்து அகற்றுவதற்கான அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 2 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இடிப்பு
அதன்படி நேற்று காலையில் வரதவிநாயகர் கோவிலில் பாலாலய பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜை முடிந்த பிறகு கோவிவிலில் இருந்த வரதவிநாயகர் சிலை அகற்றப்பட்டு, அந்த பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ரெயில்வே ஊழியர்கள் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கனரக எந்திரங்கள் மூலம் கோவில் இடித்து அகற்றப்பட்டது. பல ஆண்டுகளாக வழிபட்டு வந்த கோவில் இடிக்கப்பட்ட போது, அந்த பகுதி மக்கள் கண்ணீர் வடித்தனர். 

Next Story