ரூ.100 கோடி திட்ட பணி முறைகேடுகளை விசாரிக்க விசாரணை கமிஷன். அமைச்சர் துரைமுருகன் பேச்சு
விருதம்பட்டு சர்க்கார்தோப்பு பகுதியில் ரூ.100 கோடி திட்டப்பணியில் எவ்வளவு முறைகேடு நடந்தது என்பது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்
விருதம்பட்டு சர்க்கார்தோப்பு பகுதியில் ரூ.100 கோடி திட்டப்பணியில் எவ்வளவு முறைகேடு நடந்தது என்பது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
விசாரணை கமிஷன்
தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் காட்பாடி சில்க்மில் அருகே உள்ள பூங்காவில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட தொடக்க விழா நடந்தது. வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர்ஆனந்த் எம்.பி., வேலூர் மாநகராட்சி தலைவர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-
அரசின் சார்பில் ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் முறையாக செலவிடப்பட வேண்டும். விருதம்பட்டு சர்க்கார்தோப்பு பகுதியில் சூரியஒளி மூலம் மின்உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு ரூ.100 கோடி செலவு செய்ததாக கூறுகிறார்கள். அதில் எவ்வளவு முறைகேடு நடந்தது என்பது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிப்படை தன்மையுடன்
காட்பாடி தொகுதியில் நடைபெறும் அனைத்து பணிகள் குறித்து எனக்கு தெரிவிக்க வேண்டும். கடந்த ஆட்சி கொடுக்கல்-வாங்கல் ஆட்சி. ஆனால் தற்போது மக்களின் ஆட்சி. அனைத்து பணிகளும் வெளிப்படை தன்மையுடன் நடைபெற வேண்டும். இந்த பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் பல ஆண்டுகளாக தனிநபரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை ஒரு வாரத்திற்குள் அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களில் மரக்கன்றுகள் நட்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். வேப்பமரம் போன்று ஆக்சிஜன் தரும் மரக்கன்றுகளை நட வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளால் பொதுமக்கள் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து சாலைகள் அமைக்க வேண்டும். கவுன்சிலர்கள் அனைவரும் தங்களது வார்டுக்கு தினமும் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும். காட்பாடி தொகுதியில் தொழிற்பேட்டை, ஐ.டி. பார்க் உள்ளிட்டவற்றை கொண்டு வருவேன். வேலூர் மாநகராட்சி பகுதியில் நடக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
பின்னர் அமைச்சர் பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். இதில், வேலூர் உதவிகலெக்டர் பூங்கொடி, 2-வது மண்டல உதவிகமிஷனர் செந்தில்குமரன், இளநிலை பொறியாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
விழாவிற்கு பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்பு கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவை பாரபட்சம் பார்க்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையென்றால் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து விடுவார்கள். நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியிருப்பவர்களை நடுத்தெருவில் நிற்க வைக்காமல் மாற்றுஇடம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். குடியாத்தத்தில் அரசால் வீடு வழங்கப்பட்டவர்கள் கூட நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளார்கள்.
அகரம் ஆற்றில் அதிகளவு நீர்வரத்து உள்ளது. எனவே ஆற்றில் தடுப்பணை கட்டப்படும். ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் மத்திய அரசின் திட்டம். இந்த திட்டத்துக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தால், அதுகுறித்து மத்திய அரசு தான் கர்நாடக அரசுடன் பேச வேண்டும். தாமிரபரணி-கருமேனி ஆற்றுடன் இணைக்கும் திட்டம், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், தென்பெண்ணை-செய்யாறு இணைப்பு ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் தென்பெண்ணை-பாலாறு இணைப்பு தொடர்பாக விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் அதற்கான நிதி அரசிடம் தற்போது இல்லை. கனிமவளம் கொள்ளையடிக்கப்படுகிறது. அதனை தடுத்து வண்டிகளை பறிமுதல் செய்துள்ளோம். இதுகுறித்த புள்ளிவிவரங்களை சட்டமன்றத்தில் தெரிவிப்பேன் என்று கூறினார்.
Related Tags :
Next Story