வருகிற 1-ந் தேதி முதல் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் வழியாக செல்ல அனைத்து வாகனங்களுக்கும் தடை


வருகிற 1-ந் தேதி முதல்  காட்பாடி ரெயில்வே மேம்பாலம் வழியாக செல்ல அனைத்து வாகனங்களுக்கும் தடை
x
தினத்தந்தி 27 March 2022 7:32 PM IST (Updated: 27 March 2022 7:32 PM IST)
t-max-icont-min-icon

காட்பாடி ரெயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட உள்ளதால் வருகிற 1-ந் தேதி முதல் அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர்

காட்பாடி ரெயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட உள்ளதால் வருகிற 1-ந் தேதி முதல் அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாகனங்கள் செல்ல தடை

காட்பாடி ரெயில்வே மேம்பால ஓடுதளத்தின் இணைப்புகள் வலுவிழந்து காணப்படுகிறது. எனவே அவற்றை சரி செய்வதற்கான பணியில் ரெயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி முதற்கட்டமாக கடந்த 19-ந் தேதி முதல் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. கனரக வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக சித்தூர், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து வாகன போக்குவரத்தையும் நிறுத்தி ரெயில்வே மேம்பாலம் பழுது பார்க்கும் பணியை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அவற்றின் விவரம் வருமாறு:-

மாற்று வழித்தடங்கள்

வேலூரில் இருந்து சித்தூர் செல்லும் அனைத்து பஸ்களும் மீன்மார்க்கெட் அருகே உள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து வி.ஐ.டி., இ.பி.கூட்ரோடு, சேர்க்காடு வழியாகவும், சித்தூரில் இருந்து வேலூர் வரும் பஸ்கள் சேர்க்காடு, இ.பி.கூட்ரோடு, வி.ஐ.டி. வழியாக தற்காலிக பஸ்நிலையத்துக்கும், குடியாத்தத்தில் இருந்து வேலூர் வரும் பஸ்கள் லத்தேரி, காட்பாடி கூட்ரோடு, கிறிஸ்டியான்பேட்டை, டெல் வரையிலும், அங்கிருந்து குடியாத்தம் வரை செல்லும் பஸ்கள் அதே பாதையிலும், குடியாத்தம் முதல் ஆற்காடு வரை செல்லும் பாதி பஸ்கள் லத்தேரி பிரிவு வரையிலும், மீதமுள்ள பஸ்கள் சித்தூர் பஸ்நிலையம் முதல் வி.ஐ.டி. இ.பி.கூட்ரோடு, திருவலம், ஆற்காடு வரையிலும் செல்ல வேண்டும்.

வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வாகனங்கள் வேலூர் பழைய பஸ்நிலையம், சித்தூர் பஸ்நிலையம், வி.ஐ.டி., இ.பி.கூட்ரோடு, சேர்க்காடு, வள்ளிமலை, சோளிங்கர், திருத்தணி செல்ல வேண்டும். கிறிஸ்டியான்பேட்டையில் இருந்து சித்தூர் பஸ்நிலையம் வரும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்றவை வள்ளிமலை கூட்ரோடு, காமராஜபுரம், ரெயில்வே நுழைவுபாலம், பழைய காட்பாடி வழியாக சித்தூர் பஸ்நிலையமும், வேலூரில் இருந்து கிறிஸ்டியான்பேட்டை செல்லும் வாகனங்கள் சித்தூர் பஸ்நிலையம், பழைய காட்பாடி, ரெயில்வே நுழைவுபாலம், காமராஜபுரம், வள்ளிமலை கூட்ரோடு வழியாகவும், கிறிஸ்டியான்பேட்டை, கரசமங்கலம், லத்தேரியில் இருந்து வேலூர் செல்லும் கார், இலகுரக, கனரக வாகனங்கள் ஜாப்ராபேட்டை, கழிஞ்சூர், விருதம்பட்டு வழியாக செல்லவும் மாற்று வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.

Next Story