நத்தம் தொகுதியில் விரைவில் அரசு கலைக்கல்லூரி அமைச்சர் சக்கரபாணி பேச்சு


நத்தம் தொகுதியில் விரைவில் அரசு கலைக்கல்லூரி அமைச்சர் சக்கரபாணி பேச்சு
x
தினத்தந்தி 27 March 2022 9:12 PM IST (Updated: 27 March 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் தொகுதியில் விரைவில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார்.

கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகேயுள்ள எமக்கலாபுரம் ஊராட்சி வேலாம்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் விஜயன் தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்திநாதன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு சாணார்பட்டி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பகுதி நேர ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர், மாநிலம் முழுவதும் ஆயிரம் ரேஷன்கார்டுகளுக்கு மேல் இருக்கும் ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைகளை அரசு கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 
பின்னர் எமக்கலாபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். 

நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்
வேம்பார்பட்டி ஊராட்சி கோபால்பட்டியில் நடந்த விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கி பேசினார். 
அப்போது அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க.ஆட்சி அமைத்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பன உள்ளிட்ட 505 வாக்குறுதிகள் கொடுத்திருந்தார் அதில் தற்போது 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 54 ஆயிரத்து 600 பேருக்கு ரூ.208 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நத்தம் தொகுதியில் விரைவில் அரசு கலைக்கல்லூரி, மாம்பழம், புளி உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்களை இருப்பு வைக்க குளிர்பதன கிடங்கு, கூட்டுக்குடிநீர் திட்டம், புதிய அணைக்கட்டு ஆகியவை விரைவில் அமைக்கப்படும் என்றார். 
இதேபோல் நொச்சிஓடைபட்டி, கொசவபட்டி, சாணார்பட்டி, கணவாய்பட்டி ஆகிய இடங்களில் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

கலந்து கொண்டவர்கள்
இந்த விழாக்களில் திண்டுக்கல் எம்.பி.வேலுச்சாமி, ஆர்.டி.ஓ. பிரேம்குமார், கூட்டுறவு துணைப்பதிவாளர் முத்துக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம். சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க.செயலாளர்கள் தர்மராஜன், மோகன், மாவட்ட கவுன்சிலர் லலிதா, சாணார்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பழனியம்மாள், துணைதலைவர் ராமதாஸ், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர்பாட்ஷா, சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமுத்து, அருள்கலாவதி, எமக்கலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், துணைதலைவர் ஜெரால்டு, ஒன்றிய கவுன்சிலர்கள் முருகேசன், சண்முகவேல், குழந்தை தெரசு, ஊராட்சி மன்ற தலைவர்கள் கவிதா, முத்துலட்சுமி, சுரேஷ், சலேத்மேரி, கந்தசாமி, நிஷாராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story