சின்னமனூர் அருகே 100 பவுன் நகைக்கடன் மோசடி; கூட்டுறவு சங்க செயலாளர் கைது


சின்னமனூர் அருகே 100 பவுன் நகைக்கடன் மோசடி; கூட்டுறவு சங்க செயலாளர் கைது
x
தினத்தந்தி 27 March 2022 9:12 PM IST (Updated: 27 March 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் 100 பவுன் நகைக்கடன் மோசடி செய்த சங்க செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

தேனி:
சின்னமனூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் 100 பவுன் நகைக்கடன் மோசடி செய்த சங்க செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
கூட்டுறவு கடன் சங்கம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுக்காங்கல்பட்டியில் கோபால்நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் வெள்ளையம்மாள்புரம், மூர்த்திநாயக்கன்பட்டி, சுக்காங்கல்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், இந்த கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகளை கூடுதல் தொகைக்கு தனியார் அடகுக்கடைகள் மற்றும் தனியார் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டதாக தகவல் பரவியது. பொதுமக்கள் சிலருக்கு இதுதொடர்பாக நோட்டீசும் சென்றது.
100 பவுன் நகைகள் 
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளை அடகு வைத்த பொதுமக்கள் இந்த கூட்டுறவு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இதுகுறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நகைக்கடன் விவரங்களை தணிக்கை செய்தனர். 
அப்போது கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்கள் அடகு வைத்த 52 நகைக்கடனுக்குரிய ரூ.30 லட்சத்து 64 ஆயிரத்து 200-க்குரிய நகைகளை திருப்பியது போன்று கணக்கு காண்பித்து, அதனை தனியார் அடகுக்கடைகள், தனியார் வங்கிகளில் அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.  மேலும், இந்த செயலை அந்த சங்கத்தின் செயலாளர் முருகராஜன் செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு மறு அடகு வைக்கப்பட்ட நகைகள் சுமார் 100 பவுன் ஆகும். 
செயலாளர் கைது
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், உத்தமபாளையம் கூட்டுறவு துணைப்பதிவாளர் சலீம் புகார் செய்தார்.
பின்னர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இந்த மோசடி குறித்து முருகராஜன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமைராஜ் வழக்குப்பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தார்.

Next Story