கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் ராஜகோபுரத்துக்கு வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் ராஜகோபுரத்துக்கு வர்ணம் பூசும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 27 March 2022 9:17 PM IST (Updated: 27 March 2022 9:17 PM IST)
t-max-icont-min-icon

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் ராஜகோபுரத்துக்கு வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பழனி:
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி கோவில் உலக புகழ்பெற்றது. கடந்த 2006-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.
இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் கும்பாபிஷேக பணிகள் தொய்வடைந்தது.
இதற்கிடையே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த ஜனவரி மாதம் பழனி முருகன் கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது அவர், வருகிற ஜூலை மாதத்துக்குள் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து பழனியில் கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கோவிலில் உள்ள சிறிய கோபுரங்களில் வர்ணம் பூசும் பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்றதால் ராஜகோபுரத்தில் கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடப்பதால் விரைவில் பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story