சுதந்திர தின அமுத பெருவிழா சைக்கிள் போட்டி
சுதந்திர தின அமுதப்பெருவிழாவின் 4-வது நாளையொட்டி நாகர்கோவிலில் சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
நாகர்கோவில்:
சுதந்திர தின அமுதப்பெருவிழாவின் 4-வது நாளையொட்டி நாகர்கோவிலில் சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோதங்கராஜ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
சைக்கிள் போட்டி
குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா நிகழ்ச்சி ஒரு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், உணவு பொருட்கள் கண்காட்சி, மாரத்தான் போட்டி, மணல் சிற்பம் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி விழாவின் 4-வது நாளான நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சைக்கிள் போட்டி தொடங்கியது. போட்டியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வனஅதிகாரி இளையராஜா மற்றும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
போட்டியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து போட்டியில் பங்கேற்றார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய சைக்கிள் போட்டியானது பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், வடசேரி, அண்ணா விளையாட்டு அரங்கம், வேப்பமூடு, செட்டிக்குளம் வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் போட்டி நடந்தது.
முடிவில் ஆண்கள் பிரிவில் நாகர்கோவில் அனந்தநாடார்குடி அரசு பள்ளி மாணவர் ஆதித்யா வேலன் முதல் பரிசையும், மாணவர் அபினேஷ் 2-வது பரிசையும், சுரேஷ் பாபு 3-வது பரிசையும் வென்றனர்.
பெண்களுக்கான பிரிவில் ஜோசப் கான்வென்ட் பள்ளி மாணவி கோமதி முதல் பரிசையும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மனைவி விஷாலா 2-வது பரிசையும், ஆஷிலா 3-வது பரிசையும் பெற்றனர்.
92 வயது முதியவருக்கு பாராட்டு
போட்டியில் பங்கேற்ற 92 வயது முதியவர் உள்பட பரிசு பெற்ற அனைவரையும் அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டினார். பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ஜான் ஜெகத் பிரைட், மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல் உள்பட பலர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
பஸ் போக்குவரத்து
நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் துறை மற்றும் தேவசகாயம் மவுண்ட் ஆகிய இடங்களுக்கு புதிய வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று காலையில் நடந்தது.
விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.
இதனை தொடா்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துபாய் பயணம்
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்-அமைச்சரின் துபாய் பயணத்தை பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார். அது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதில் எந்த உண்மையும் இல்லை என்பதை மக்கள் அறிந்து இருக்கிறார்கள்.
எந்தவித அரசியல் பக்குவமும் இல்லாமல் குழந்தைத்தனமாக அண்ணாமலை பேசியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
நிகழ்ச்சியில் போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் ராஜேஷ்வரன் மற்றும் துணை மேலாளர்கள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் நசரேத் பசிலியான், சதாசிவம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய குழுத்தலைவர் அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story