தமிழகத்தில் அ.தி.மு.க.வை வீழ்த்தும் முயற்சியில் பா.ஜனதா இறங்கி உள்ளது கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேட்டி
தமிழகத்தில் அ.தி.மு.க.வை வீழ்த்தும் முயற்சியில் பா.ஜனதா இறங்கி உள்ளது கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேட்டி
நாமக்கல்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல்லில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ஆர். துரை வரவேற்று பேசினார். இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர். மதிவேந்தன், எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, பேரவை செயலாளர் தேவராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை மறுபரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவே துபாய் சென்று உள்ளார். அவரை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அவசரப்பட்டு பேசி வருகிறார். முதல்-அமைச்சர் தமிழகம் திரும்பியவுடன் வெளிநாடு முதலீடு ஈர்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட உள்ளார்.
தமிழகத்தில் அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்கிற முயற்சியில் பா.ஜனதா இறங்கி உள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர் வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருகிறார். தமிழக மக்கள் மத்தியில் ஆளுநர் கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறார். மத்திய அரசுக்கும் அவர் கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story