‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 27 March 2022 9:46 PM IST (Updated: 27 March 2022 9:46 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மூடியில்லா கிணறு; காத்திருக்கும் ஆபத்து

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் வீரபோகம் பகுதியில் உள்ள குடிநீர் கிணறு திறந்தவெளியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் கால்நடைகள் தவறி உள்ளே விழுந்து விடும் அபாயமும் இருக்கிறது. இந்த கிணறுக்கு மூடி அமைக்கப்படுமா?

- சக்திவேல், செங்கல்பட்டு.



கழிவுநீர் பிரச்சினைக்கு என்ன தீர்வு?

சென்னை கொருக்குப்பேட்டை மன்னப்பன் தெரு நாகாத்தம்மன் கோவில் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாய் நிரம்பி கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் கோவிலுக்கு செல்வோர், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.

- வேல்ராஜன் செல்லப்பன், மன்னப்பன் தெரு.

2மாதமாகியும் தீராத பிரச்சினை

சென்னை தியாகராயநகர் தண்டபாணி தெரு - பர்கிட் ரோடு சந்திக்கும் இடத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அந்த பள்ளத்தை சுற்றி போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த நிலை 2 மாத காலமாக தொடருகிறது. இதற்கு முடிவு தான் எப்போது?

- சிவசுப்ரமணியம், தண்டபாணி தெரு.



மோசமான சாலை சீரமைக்கப்படுமா?

சென்னையை அடுத்த மணப்பாக்கம் மெயின் ரோடு முதல் மவுலிவாக்கம் வரை சாலை சீரமைக்கப்படாமல் பள்ளமும், மேடுமாக காட்சியளிக்கிறது. இதனால், இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி சறுக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே இனியும் விபத்துக்கள் நடக்காமல் இருக்க இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

- ஸ்ரீதர், மணப்பாக்கம்.

தாழ்வாக செல்லும் மின்வயர்கள்

சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட் வளாகத்தில் பல இடங்களில் மின்வயர்கள் தாழ்வாக செல்வதை பார்க்க முடிகிறது. மேலும், பல இடங்களில் மின் இணைப்பு பெட்டிகளும் சேதமடைந்தும், வயர்கள் வெளியே தெரியும்படி ஆபத்தான முறையிலும் காட்சி தருகின்றன. எனவே மார்க்கெட் வளாகத்தில் நீடிக்கும் இப்பிரச்சினைகளுக்கு மின்வாரிய அதிகாரிகளும், சி.எம்.டி.ஏ. நிர்வாகமும் உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும்.

- ஜெயமுருகன் தங்கவேல், கோயம்பேடு.



நடவடிக்கை எடுக்கப்படுமா?

சென்னை ஐகோர்ட்டு அருகேயுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் துர்நாற்றம் சூழ்ந்துள்ளதால், சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. கழிவுநீர் பிரச்சினையை தடுக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்குமா?

- ஜெயராம்ராஜ், சுபாஷ் சந்திரபோஸ் சாலை.

விபத்துகள் தடுக்கப்படுமா?

சென்னை பெரம்பூர், நேரு ஜோதிநகர் பள்ளிக்கூடம் அருகே பாதாள சாக்கடை சாலை மட்டத்தில் இருந்து பள்ளத்தில் இருக்கிறது. இதனால் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் தொடர்கதையாகவே இருக்கிறது. எனவே பாதாள சாக்கடையை சாலை மட்டத்துக்கு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சேகர், நேரு ஜோதிநகர்.



குப்பை தொட்டிகள் வைக்கப்படுமா?

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் குப்பைத் தொட்டிகள் இல்லை. இதனால் சாலை ஓரத்திலேயே குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. மேலும், இந்த பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் சாப்பிடும் காட்சி தினமும் அரங்கேறுகிறது. இப்பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்படுமா?

- பொதுமக்கள், ஆவடி.

மருத்துவ சேவையில் அலட்சியம் வேண்டாம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வில்லிவாக்கம் கொள்ளுமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி பெண்களை, அங்குள்ள வட்டார மருத்துவ அதிகாரிகள் தரக்குறைவாக பேசி அவமதிக்கிறார்கள். நர்சுகளை அடிமை போல நடத்துகிறார்கள். இரவு வேளைகளில் டாக்டர் இல்லாமலேயே பிரசவம் அரங்கேறுகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் சுகாதாரத்துறை அரசு அதிகரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- வெள்ளானூர் கிராம மக்கள்.

கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மெயின் ரோட்டில் உள்ள ஜேம்ஸ் 5-வது தெரு சந்திப்பின் இருபுறமும் தொடங்கப்பட்ட மழைநீர் கால்வாய் பணி முடிவடையாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கிறது. மேலும் மழைநீர் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவில்லை.

- பொதுமக்கள், பூந்தமல்லி.





Next Story