குடியாத்தம் நகராட்சி பகுதிக்கு 2 நாட்களில் காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் தொடங்கும்


குடியாத்தம் நகராட்சி பகுதிக்கு  2 நாட்களில் காவிரி கூட்டுக் குடிநீர் வினியோகம் தொடங்கும்
x
தினத்தந்தி 27 March 2022 9:50 PM IST (Updated: 27 March 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் நகராட்சி பகுதிக்கு 2 நாட்களில் காவிரி கூடே்டுக்குடிநீர் வினியோகம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியாத்தம்

குடியாத்தம் நகராட்சி பகுதிக்கு 2 நாட்களில் காவிரி கூடே்டுக்குடிநீர்  வினியோகம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் பாதிப்பு

குடியாத்தம் நகராட்சிக்கு குடியாத்தம் அடுத்த பாலாற்றில் இருந்து ராட்சத கிணறுகள் மூலம் பசுமாத்தூர் நீரேற்று நிலையம் மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகொண்டா அருகே உள்ள ஹைதர்புரம் பகுதியில் ராட்சத குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடியாத்தம் நகராட்சிக்கு தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் காவிரி சப்ளை செய்யப்பட்டு வந்தது. 

கடந்த நவம்பர் மாதம் பாலாற்றிலும், குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றிலும் ஏற்பட்ட வெள்ளத்தில் காவிரி குடிநீர் பைப்புகள் அடித்துச் செல்லப்பட்டது. பசுமாத்தூர் நீரேற்று நிலையத்தில் குடிநீர் சப்ளை செய்யும் 3 ராட்சத கிணறுகளும் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஆய்வு

நகராட்சியில் சிறு மின்விசை பம்புகள் மூலமாகவும், டிராக்டர்கள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. குடியாத்தம் நகராட்சி பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விரைவாக கிடைக்க அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைதொடர்ந்து குடிநீர் வாரிய அதிகாரிகள் பாலாற்றில் வெள்ளம் நின்றதால் போர்க்கால அடிப்படையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குழாய் பழுதை நீக்கி சீர் செய்து வந்தனர். இதனால் குடியாத்தம் பகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் ராட்சத பைப்புகள் பழுது சரி செய்யப்பட்டது.
 
காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பைப்புகள் சீர்செய்யப்பட்டதை தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக நான்கு குடிநீர் தொட்டிகளுக்கு மட்டும் தண்ணீர் சப்ளையானது. இதனால் குடியாத்தம் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் கிடைத்தது. மீதமுள்ள பகுதிகளுக்கான கவுண்டன்ய மகாநதி ஆற்றின் வழியாகசெல்லும் ராட்சத பைப்புகளின் பழுதை சீர் செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆட்டோமோகன், தேவகி கார்த்திகேயன், இந்துமதி கோபாலகிருஷ்ணன், ரேணுகாபாபு உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

2 நாட்களில் தொடங்கும்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குடியாத்தம் நகரமன்ற தலைவர் சவுந்தரராசன் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது:-
காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பைப்லைன் சீரமைக்கும் பணிகள் கவுண்டன்யமகாநிதி ஆற்றில் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. காவிரி தண்ணீர் இரண்டு தினங்களில் குடியாத்தம் நகராட்சி பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படும். குடியாத்தம் நகருக்கு தினமும் 70 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைப்பதால் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும். தண்ணீரை பொதுமக்கள் காய்ச்சியும், சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story