முதுமலையில் இருந்து கூடலூர் வந்தபோது டயர் வெடித்ததில் அரசு பஸ் சேதம்


முதுமலையில் இருந்து கூடலூர் வந்தபோது டயர் வெடித்ததில் அரசு பஸ் சேதம்
x
தினத்தந்தி 27 March 2022 9:55 PM IST (Updated: 27 March 2022 9:55 PM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் இருந்து கூடலூர் வந்தபோது டயர் வெடித்ததால் அரசு பஸ் சேதம் அடைந்தது. இதில் 3 பெண் பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

கூடலூர்

முதுமலையில் இருந்து கூடலூர் வந்தபோது டயர் வெடித்ததால் அரசு பஸ் சேதம் அடைந்தது. இதில் 3 பெண் பயணிகள் படுகாயம் அடைந்தனர். 

அரசு பஸ் 

கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தின் கீழ் மசினகுடி, பந்தலூர், கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

இதில் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில்தான் இருக்கிறது. எனவே பஸ்கள் அடிக்கடி நடுவழியில் நிற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். 

இந்த நிலையில் கூடலூரில் இருந்து மசினகுடி வழியாக மாயாறுக்கு அரசு பஸ் சென்றது. பின்னர் அந்த பஸ் முதுமலை வழியாக கூடலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தது. 

டயர் வெடித்தது 

அந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ் தொரப்பள்ளி அருகே வந்தபோது அந்த பஸ்சின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் சாலையில் தாறுமாறாக அந்த பஸ் சென்றது. இதன் காரணமாக பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அலறினார்கள். 

அந்த பஸ்சை டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தினார். இருந்தபோதிலும் பஸ்சின் உள்பக்க தரைத்தளம் சேதம் அடைந்தது. 

இதனால் பஸ்சுக்குள் இருக்கையில் அமர்ந்து இருந்த மசினகுடி சேர்ந்த வினிதா (வயது 27), லட்சுமி (28), பொக்காபுரத்தை சேர்ந்த ஷீபா (19) ஆகிய 3 பெண் பயணிகள் காயம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

3 பேர் படுகாயம்

உடனே படுகாயம் அடைந்த அந்த 3 பெண் பயணிகளும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அங்கிருந்து சென்றனர்.

இது குறித்து பயணிகள் கூறும்போது, கூடலூர் பகுதியில் இயக்கப்படும் பஸ்கள் பாதுகாப்பான நிலையில் இல்லை. எனவே நல்ல தரமான பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story