தளி அருகே காட்டுயானையை சுட்டுக்கொன்ற விவசாயி கைது


தளி அருகே காட்டுயானையை சுட்டுக்கொன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 27 March 2022 9:56 PM IST (Updated: 27 March 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

தளி அருகே காட்டுயானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

தேன்கனிக்கோட்டை:
தளி அருகே காட்டுயானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.
காட்டுயானை சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது பனைமரம் மேற்கு காப்புக்காட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் காட்டுயானை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வன அதிகாரி கார்த்திகேயினி, வனச்சரகர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது காட்டுயானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு காட்டுயானையை உடல் பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் குழி தோண்டி புதைத்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
விவசாயி கைது
அப்போது ஜவளகிரி அருகே உள்ள திம்மன்தொட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரப்பன் (வயது50) என்பவர் நாட்டுத்துப்பாக்கியால்  காட்டுயானையை சுட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பட்டியில் வளர்த்து வரும் மாடுகளை பெண் காட்டுயானை தாக்க வந்ததால் அதனை துப்பாக்கியால் சுட்டதும், காட்டுப்பகுதிக்குள் சென்று சிறிது நேரத்தில் யானை இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மாரப்பனிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story