ஊத்தங்கரையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 952 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் காந்தி வழங்கினார்
ஊத்தங்கரையில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 952 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் காந்தி வழங்கினார்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரையில் நடந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 952 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் காந்தி வழங்கினார்.
வேலை வாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, மதியழகன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எழுத படிக்க தெரியாதவர்கள் முதல் தொழிற்கல்வி பயின்றோர் வரை 1,55,914, பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 80,327 பேர் பெண்கள். பெருகி வரும் தொழில் வளர்ச்சியின் காரணமாக தற்போது, தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2021-2022-ம் ஆண்டில் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இம்மாவட்டத்தில் 3,994 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
இலவச பயிற்சி
இதில் 15 பேர் பணி நியமனம் பெற்று பணிபுரிந்து வருகின்றனர். இந்த முகாம்கள் வேலை நாடுனர்களும், வேலையளிப்பவர்களும் நேரடியாக சந்தித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் ஒரு இணைப்பு பாலமாக செயல்படுகிறது. போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு அரசு வேலைவாய்ப்புகளை பெற உதவும் வகையில், ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் அமைந்துள்ள தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் இந்த வகுப்புகளில் பயிற்சி பெற்றுள்ளவர்களில் 2021-ம் ஆண்டு வரை 72 பேர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். எனவே கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பணிநாடுனர்கள் ஆகியோர் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தங்களுக்கு விருப்பமான பணியை தேர்ந்தெடுத்து பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
952 பேருக்கு நியமன ஆணை
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 76 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் 3,239 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 952 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஸ்குமார், வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் லதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஹெப்சிபா ஏஞ்சலா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சுந்தரம், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி, முன்னாள் எம்.பி. சுகவனம், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், தாசில்தார் தெய்வநாயகி, ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன், ஒன்றிய குழு துணை தலைவர் சத்தியவாணி செல்வம், பேரூராட்சி தலைவர் அமானுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story