கோடை வெயில் கொளுத்தியது ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்


கோடை வெயில் கொளுத்தியது ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 27 March 2022 9:57 PM IST (Updated: 27 March 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

கோடை வெயில் கொளுத்தியதால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

பென்னாகரம்:
கோடை வெயில் கொளுத்தியதால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனிடையே தமிழக-கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
போலீசார் ரோந்து
தொடர்ந்து அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு அருவியின் அழகை கண்டு ரசித்தனர். முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். கோடை வெயில் கொளுத்தியதால் சுற்றுலா பயணிகள் நடைபாதை மற்றும் மரத்தடியில் ஆங்காங்கே அமர்ந்து இருந்தனர். 
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் ஆலம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

Next Story