வேலைநிறுத்தம் எதிரொலி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு
வேலைநிறுத்தம் எதிரொலியால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
தென் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அதிகளவில் அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளாவுக்கு 70 சதவீதம் காய்கறிகள் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. வழக்கமாக சனிக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அதிகளவு வியாபாரிகள் வருவார்கள்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளையும், (திங்கட்கிழமை), நாளை மறுநாளும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதனால் கேரளாவில் இருந்து பெரும்பாலான வியாபாரிகள் இன்று ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வரவில்லை. மேலும் காய்கறி விலையும் மிகவும் குறைந்து காணப்பட்டது.
14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.80 முதல் ரூ.100 வரை விலை போனது. இதுபோல சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15, பல்லாரி ஒரு கிலோ ரூ.25, பீட்ரூட் ரூ.4, வெண்டைக்காய் ரூ.10,, சுைரக்காய் ரூ.2, பூசணிக்காய் ரூ.6, முருங்கை ரூ.32, மிளகாய் ரூ.28 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இன்று உள்ளூர் விவசாயிகள் மட்டுமே மார்க்கெட்டுக்கு வந்து இருந்தனர். வெளியூர் வியாபாரிகள் யாரும் வராததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் இன்று சுமார் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காமராஜர் மார்க்கெட், தக்காளி மார்க்கெட் ஆகியவை வியாபாரிகள், விவசாயிகள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story