கோவில் குடமுழுக்கு விழாவுக்கு பக்தர்களை வரவேற்று பதாகை மதநல்லிணக்கத்தை பறைசாற்றிய இஸ்லாமியர்கள்
நன்னிலம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவுக்கு பக்தர்களை வரவேற்று பதாகை வைத்து இஸ்லாமியர்கள் மதநல்லிணக்கத்தை பறைசாற்றி உள்ளனர்.
நன்னிலம்:-
நன்னிலம் அருகே கோவில் குடமுழுக்கு விழாவுக்கு பக்தர்களை வரவேற்று பதாகை வைத்து இஸ்லாமியர்கள் மதநல்லிணக்கத்தை பறைசாற்றி உள்ளனர்.
கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பம் கிராமத்தில் காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி திருப்பணி வேலைகள் நடந்தன. இதையடுத்து கடந்த 24-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
நேற்று காலை 9 மணி அளவில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள தாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டன. பின்னர் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. அதைத்தொடர்ந்து கைலாசநாதர் மற்றும் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து நடந்த தீபாராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
பக்தர்களை வரவேற்ற இஸ்லாமியர்கள்
இந்த நிலையில் குடமுழுக்கு விழாவுக்கு வந்த பக்தர்களை வரவேற்க அந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் பதாகை வைத்து இருந்தனர். இந்த பதாகை அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது.
இந்து மத வழிபாட்டு தலத்தில் நடந்த விழாவுக்கு வரும் பக்தர்களை அன்புடன் வரவேற்பதாக கூறி இஸ்லாமியர்கள் வரவேற்பு பதாகை வைத்திருந்தது மத நல்லிணக்கத்தை பறைசாற்றுவதாக அமைந்தது என பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story