முள்ளியாற்றின் கரைகளில் தடுப்புச்சுவர்- படித்துறை கட்டப்படுமா?
கோட்டூர் பகுதியில் முள்ளியாற்றின் கரைகளில் தடுப்புச்சுவர் மற்றும் படித்துறை கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கோட்டூர்:-
கோட்டூர் பகுதியில் முள்ளியாற்றின் கரைகளில் தடுப்புச்சுவர் மற்றும் படித்துறை கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
முள்ளியாறு
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே தட்டான் கோவிலில் உள்ள கோரையாற்றில் இருந்து முள்ளியாறு பிரிந்து செல்கிறது. ஆதிச்சபுரம், கோட்டூர், தோட்டம், குமாரமங்கலம், செட்டியமூலை, விளக்குடி வழியாக முள்ளியாறு திருத்துறைப்பூண்டி பகுதிக்கு செல்கிறது. முள்ளியாற்றின் வடகரை பகுதியில் கோட்டூர் ஊராட்சி தாளந்திருவாசல், குமாரமங்கலம், செட்டியமூலை ஆகிய கிராமங்கள் உள்ளன.
தென்கரையில் கீழப்பனையூர், கீழப்பனையூர் கிழக்கு சேத்தி, ஆற்றங் கரை தெரு, திருப்பத்தூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. ஆற்றின் இரு கரைகளிலும் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராம மக்கள் அனைவரும் அனைத்து உபயோகத்திற்கும் ஆற்றின் தண்ணீரையே நம்பி உள்ளனர்.
உடைப்பு ஏற்படும் அபாயம்
தாளந்திருவாசலில் இருந்து செட்டியமூலை வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆற்றின் இரு கரையிலும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளக்காலங்களில் இந்த பகுதியில் கரை உடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். முள்ளியாற்றில் உடைப்பு ஏற்பட்டால் 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும்.
ஆற்றின் கரை ஓரங்களில் படித்துறைகள் இல்லை. இதனால் மக்கள் ஆற்றில் நேரடியாக இறங்க வேண்டி உள்ளது. இது முதியவர்களுக்கும், பெண்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் முள்ளியாறு முழுவதும் ஆகாயத்தாமரை, முள் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளது.
கிராம மக்கள் எதிர்பார்ப்பு
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆற்றை நேரில் பார்வையிட்டு வருகிற ஜூன் மாதம் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக கோடை காலத்தை பயன்படுத்தி தாளந்திருவாசல் பாலத்தில் இருந்து செட்டியமூலை கிராமம் வரை 4 கிலோமீட்டர் தூரம் முள்ளியாற்றை தூர்வார வேண்டும்.
ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச்சுவர் மற்றும் படித்துறை கட்ட வேண்டும் என அந்த பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Related Tags :
Next Story