தஞ்சையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105-யை தாண்டியது


தஞ்சையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105-யை தாண்டியது
x

தஞ்சையில் தொடர்ந்து ஏறுமுகம் காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105-யை தாண்டியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்:
தஞ்சையில் தொடர்ந்து ஏறுமுகம் காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105-யை தாண்டியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
பெட்ரோல்-டீசல்
கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இருமுறை பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-யை கடந்தது. அதைத்தொடர்ந்து ரூ.102 வரை உயர்ந்தது. அதன்பிறகு ஓரிரு மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்து வந்தது.
105-யை தாண்டியது
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் பெட்ரோல்-டீசலில் எப்போதும் எதிரொலிக்கும். அந்த வகையில் கடந்த 22-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 4 நாட்களில் ஏற்பட்ட மாற்றத்தினால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 வரை உயர்ந்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105-யை தாண்டியது.
தஞ்சை மாநகரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நேற்று சாதாரண வகை பெட்ரோல் லிட்டருக்கு 105 ரூபாய் 51 காசு, 105 ரூபாய் 49 காசு எனவும், ஸ்பெஷல் வகை பெட்ரோல் லிட்டருக்கு 109 ரூபாய் 82 காசும், 109 ரூபாய் 33 காசும் என விற்பனை செய்யப்பட்டது.
கட்டுப்படுத்த வேண்டும்
விலை உயர்வின் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. பெட்ரோல் விலை உயர்வு பல்வேறு பொருட்களின் விலை அதிகரிப்புக்கும் அடித்தளமாக அமைகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்தியஅரசு கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். அதேபோல் டீசல் விலையும் அதிகரித்து வருகிறது. தஞ்சையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை 95 ரூபாய் 64 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.


Next Story