தொண்டைமான்நல்லூரில் ஜல்லிக்கட்டு: 900 காளைகள் சீறிப்பாய்ந்தன; 36 பேர் காயம்
தொண்டைமான் நல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 900 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகள் முட்டியதில் 36 பேர் காயமடைந்தனர்.
ஆவூர்:
ஜல்லிக்கட்டு
விராலிமலை ஒன்றியம், தொண்டைமான் நல்லூரில் செல்லாயி அம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு அங்குள்ள கோவில் குளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு திடலில் நேற்று அதிகாலையில் இருந்தே புதுக்கோட்டை, கீரனூர், தஞ்சாவூர், விராலிமலை, இலுப்பூர், திருவெறும்பூர், லால்குடி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 900 காளைகள் அழைத்துவரப்பட்டன. அதேபோல ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்யப்பட்டிருந்த மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து காலை 8.10 மணி அளவில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். பின்னர் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதைத்தொடர்ந்து வாடிவாசலில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அடக்கினர். இதில் பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் அவர்களை தூக்கி வீசியும், காலால் மிதித்தும் கொம்பால் குத்தியும் சீறிப்பாய்ந்து சென்றன.
36 பேர் காயம்
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உள்பட 36 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த மாடுபிடி வீரர் விராலிமலை தாலுகா அவ்வையார்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 24) உள்பட 6 பேர் மேல் சிகிச்சைக்காக கீரனூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பரிசு
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, குளிர்சாதனப்பெட்டி, குக்கர், எவர்சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், வெள்ளிநாணயம், ரூ. 5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளைக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டை குளத்தூர் தாசில்தார் பெரியநாயகி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மாத்தூர், கீரனூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் கண்டு களித்தனர். காலை 8.10 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2.45 மணி வரை நடைபெற்றது. கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன் தலைமையில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
Related Tags :
Next Story