39 பவுன் நகை-வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த 4 பேர் கைது


39 பவுன் நகை-வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 March 2022 10:57 PM IST (Updated: 27 March 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகை-வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கல்:
நாகை அருகே வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகை-வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவிழாவுக்கு சென்றார்
நாகை மாவட்டம் சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர்  வேல்ராஜ் (வயது 50). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி. கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் நாகலட்சுமி தனது வீட்டில் தாயார் மல்லிகாவுடன் வசித்து வந்தார். 
இந்த நிலையில் .கடந்த 15-ந் தேதி நாகலட்சுமி தனது தாயாருடன் வீட்டை பூட்டி விட்டு கோவில் திருவிழாவிற்காக வேளாங்கண்ணி அருகே பூவத்தடி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார்.
39 பவுன் நகைகள் கொள்ளை
கடந்த 18-ந் தேதி நாகலட்சுமியின் வீட்டின் பிக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், நாகலட்சுமிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். 
உடனே அவர் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து அறைகளில் இருந்த மூன்று பீரோக்களை உடைத்து அதில் இருந்த 39 பவுன் நகைகள்,  2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.3 லட்சம் மற்றும்  விலை உயர்ந்த எல்.இ.டி.டி.வி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
தனிப்படை அமைப்பு
இதுகுறித்து நாகலட்சுமியின் தாயார் மல்லிகா கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில்  துணை சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். 
இந்த நிலையில் நகைகள் கொள்ளையடித்த வழக்கில் நாகை செக்கடி தெருவைச் சேர்ந்த கொறசேகர்(50) என்பவரை தேடி வந்தனர். இதை அறிந்த அவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
4 பேர் கைது
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நாகலட்சுமி வீட்டில் தனது நண்பர்களான வெளிப்பாளையம், வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (36), நாகை சிவன் மேலவீதியை சேர்ந்த காளிதாஸ் (45), நாகை கீரக்கொல்லை தெருவை சேர்ந்த கார்த்தி (36) ஆகியோருடன் சேர்ந்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், பணத்தை கொள்ளையடித்து சென்றதை ஒப்பு கொண்டார்.
இதை தொடர்ந்து கொறசேகர், காளிதாஸ், கார்த்தி,  பிரகாஷ்  ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 
நகைகள் மீட்பு
மேலும் அவர்களிடம் இருந்து 39 பவுன் நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் மற்றும் எல்.இ.டி.டி.வி. ஆகியவற்றை மீட்டனர்.
பின்னர் 4 பேரையும் நாகை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர். இவர்கள் 4 பேர் மீதும் நாகை மற்றும் வெளிப்பாளையம் போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story