பிராம்பட்டியில் மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டியதில் சிறுமி உள்பட 30 பேர் காயம்


பிராம்பட்டியில் மஞ்சுவிரட்டு:  காளைகள் முட்டியதில் சிறுமி உள்பட 30 பேர் காயம்
x
தினத்தந்தி 27 March 2022 11:08 PM IST (Updated: 27 March 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

பிராம்பட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் சிறுமி உள்பட 30 பேர் காயம் அடைந்தனர்.

அன்னவாசல்:
மஞ்சுவிரட்டு
அன்னவாசல் அருகே பிராம்பட்டியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டை மாவட்ட உதவி ஆணையர் (கலால்) மாரி தொடங்கி வைத்தார். பிராம்பட்டி திடலில் காலை 9 மணிக்கு மஞ்சுவிரட்டு தொடங்கியது. முன்னதாக கோவில் காளைகள் ஊர்வலமாக பாரம்பரிய முறைப்படி மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு அவிழ்த்துவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை, அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஒரு சில காளைகள் மட்டும் வீரர்களிடம் பிடிபட்டன. பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் வெளியேறின.
30 பேர் காயம்
இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் வீரமணி, கருப்பையா, அழகுபாண்டியன், சதீஷ், முருகேசன், முருகன், வெள்ளைச்சாமி, பழனிவேல், கர்னாஸ் உள்பட 30 பேர் காயமடைந்தனர். பின்னர் காயம் அடைந்தவர்கள் அன்னவாசல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த 6 வயது சிறுமியான பிராம்பட்டியை சேர்ந்த ஹன்சிகா  திருச்சி மருத்துவமனையிலும், குடுமியான்மலையைசேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் புதுக்கோட்டை அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
பரிசு
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்க பணமும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், நாற்காலிகள், வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. பிராம்பட்டியில் நடந்த முதல் மஞ்சுவிரட்டில் கீழக்குறிச்சி, அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை, புதுக்கோட்டை, கீரனூர், திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். பாதுகாப்பு பணியில் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழிஅரசு தலைமையில், அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
மருத்துவ வசதி இல்லை
மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் நாலாபுறமும் தெறித்து ஓடியது. அப்போது  பார்வையாளர்கள் நின்ற பகுதிகளில் நுழைந்தது. அப்போது பலருக்கு காயங்கள் ஏற்பட்டது. சிலருக்கு படுகாயங்களும் ஏற்பட்டது. அப்போது சம்பவ இடத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தனியார் அமைப்பு சார்பில் இயக்கப்பட்ட ஒரே ஆம்புலன்ஸ் மூலம் மட்டுமே கொண்டு செல்லப்பட்டனர். இதனால் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக பல மணிநேரம் காத்து கிடந்தனர்.

Next Story