தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குளத்தை தூர்வார வேண்டும்
நாகர்கோவில் வடசேரி புதுக்குடியிருப்பு பகுதியில் சுப்பையார்குளம் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டியும், கழிவுகள் தேங்கியும் கிடக்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.ஜோணி, ஆரல்வாய்மொழி.
நடவடிக்கை தேவை
நாகர்கோவில் மாநகர் சாலைகளில் இருசக்கர வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. சிலர் இருசக்கர வாகனங்களின் புகை குழாய்களை மாற்றியமைத்து அதிக ஒலி எழுப்பும் வகையில் ஓட்டிச் செல்கின்றனர். இதனால், சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, அதிக ஒலி எழுப்பும் வகையில் செல்லும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணபிள்ளை, பாவலர்நகர்.
வாகன ஓட்டிகள் அவதி
நாகர்கோவில் புலவர்விளை என்.வி. தெருவில் இருந்து பொதுப்பணித்துறைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக குழாய்கள் பதிக்கப்பட்டன. அதன்பிறகு அந்த சாலை முறையாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும், குடிநீர் வினியோகமும் தடைபட்டுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், என்.வி.தெரு, புலவர்விளை.
தடுப்பு வேலி அகற்றப்படுமா?
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அண்ணா பஸ்நிலையம் உள்ளது. இங்கிருந்து குமரி மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு அரசு பஸ் மற்றும் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், கிராம புறங்களில் உள்ளது போல் பஸ்நிலையத்தில் ஒரு பகுதியில் தடுப்பு வேலிகள் வைத்துள்ளனர். இதனால், பஸ்கள் நிலையத்துக்குள் வந்து திரும்புவதற்கு வசதியில்லாமல் உள்ளதால் பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்பு வேலிகளை அகற்றி பஸ்கள் வந்து திரும்புவதற்கு வசதியாக நிலையத்தை சீரமைத்து தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வே.சிவகுமார், கோட்டார்.
சாலையை சீரமைக்க வேண்டும்
பைங்குளம் ஊராட்சியில் வேட்டமங்கலத்தில் இருந்து கொச்சத்திமூலை கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வமணி, வேட்டமங்கலம்.
பள்ளம் சீரமைக்கப்பட்டது
நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை மணலி சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியின் அருகில் சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைத்தனர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story