‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருவிளக்குகள் இல்லை
நாகை மாவட்டம் திருமருகல் பகுதி போலகம் 4-வது வார்டு நடுத்தெரு, பெரியக்குளத்தெருவில் 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெரு விளக்குகள் இல்லை. போதிய மின்கம்பங்களும் இல்லாததால் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் தெருக்கள் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் வெளியே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மின் இணைப்பு பிரச்சினையை தீர்க்கவும், தெருவிளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், நடுத்தெரு போலகம்.
சாலை சீரமைக்கப்படுமா?
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி பிராந்தியக்கரை கிராமத்தில் இருந்து தலைக்காடு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்கால் பாலங்களும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் பாலத்தை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குண்டும், குழியுமான சாலையினால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையையும், பாலத்தையும் சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், வேதாரண்யம்.
மின்விளக்கு வசதி வேண்டும்
நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலையில் கிச்சாங்குப்பம் அருகே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் மேம்பாலத்தில் இரவு நேரங்களில் செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிச்சாங்குப்பம் அருகே உள்ள மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்தையன், நாகை.
Related Tags :
Next Story