மக்கள் அனுமதி இல்லாமல் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம்
என்.எல்.சி. சுரங்கம் என்ற பெயரில் நிலங்களை பறிப்பதா?, மக்கள் அனுமதி இல்லாமல் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம் என்று கருத்துக்கேட்பு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்குள்ள திறந்தவெளி சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது நிலக்கரி தோண்டி எடுப்பதற்காக ஏற்கனவே உள்ள சுரங்கங்களை விரிவாக்கம் செய்யவும், புதிதாக 3-வது சுரங்கம் அமைக்கவும் என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கருத்துக்கேட்பு கூட்டம்
இந்தநிலையில் நெய்வேலி சுரங்கம் என்ற பெயரில் நிலங்களை பறிப்பதா? என்ற தலைப்பில் விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூரில் பா.ம.க. சார்பில் மக்கள் சந்திப்பு மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, வக்கீல் பாலு, மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், சண்.முத்துகிருஷ்ணன், ரவிச்சந்திரன், மாநில அமைப்பு துணை தலைவர் வேங்கை சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்து கேட்டார்
கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு மக்களிடம் கருத்து கேட்டார்.
அப்போது கிராம மக்கள் கூறுகையில், 10 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 500 அடிக்கு கீழே சென்று விட்டது. இதற்கு என்.எல்.சி. நிர்வாகம் தான் காரணம். இந்த நிலத்தில் விவசாயம் செய்துதான் எங்களை படிக்க வைத்தார்கள். இந்த ஊரைவிட்டு வெளியேற மாட்டோம். ஒரு பிடி மண்ணை கூட தரமாட்டோம் என்று கூறினர்.
பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-
என்.எல்.சி.க்கு கண்டனம்
இந்த மண்ணை நம்பிதான் நீங்களும், உங்கள் குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் இவ்வளவு ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகிறீர்கள். ஆனால் எப்படியாவது இந்த மண்ணை பிடுங்கி எடுப்போம் என்று என்.எல்.சி நிர்வாகம் கங்கணம் கட்டியிருக்கிறது.
பா.ம.க. என்றுமே வளர்ச்சிக்கு எதிரான கட்சி கிடையாது. நமக்கு வளர்ச்சி தேவை. வாழ்வாதாரத்தை, விவசாய நிலத்தை பிடுங்கி, வளர்ச்சி என்ற போர்வையில் என்.எல்.சி. நிறுவனம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
ஒருபிடி மண்ணை கூட எடுக்க முடியாது
கருத்து கேட்டபோது சிலர் உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள். நாங்கள் ஒருபிடி மண்ணை கூட தரமாட்டோம் என கூறியுள்ளீர்கள். உங்களுக்கு பாதுகாவலராக டாக்டர் ராமதாஸ் இருக்கிறார். அவருடைய கட்டளைபடிதான் நான் இங்கு வந்துள்ளேன். உறுதியாக உங்களிடம் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். உங்கள் அனுமதி இல்லாமல் இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட என்.எல்.சி. நிர்வாகம் எடுக்க விடமாட்டோம்.
இனியும் ஏமாற மாட்டோம்
1956-ம் ஆண்டில் என்.எல்.சி. நிர்வாகம் இங்கு சில லட்சங்களை முதலீடு செய்தது. தற்போது என்.எல்.சி. நிர்வாகத்தின் மதிப்பு ரூ.54 ஆயிரம் கோடி. கடந்த ஆண்டு அந்த நிறுவனம் ரூ.11 ஆயிரத்து 500 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த மக்களுக்கும், இந்த மாவட்டத்திற்கும் என்.எல்.சி. என்ன செய்தது. தண்ணீரை சுரண்டி விவசாயத்தை பாழாக்கிய நிறுவனம்.
ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும் என்று 2008-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கொடுத்தது. ஆனால் இன்று வரை தொழிலாளர்களை நிரந்தரமாக்கவில்லை. சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்களை அழைத்து வருகிறார்கள். இங்கு நாம் கோவணம் கட்டிக்கொண்டு சுற்றித்திரிகிறோம். இனியும் நாங்கள் ஏமாற தயாராக இல்லை.
பல கட்ட போராட்டம்
இந்த மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தற்போது அமைச்சரானதும் காவல்துறை மூலமாக நிலத்தை கையகப்படுத்த முயச்சிக்கிறார்.
ராணுவமே வந்தாலும், நிலத்தை கையகப்படுத்த விடமாட்டோம். ஒரு பிடி மண்ணை கூட விட்டு தரமாட்டோம். இனிமேல் பலகட்ட போராட்டம் என் தலைமையில் நடைபெற உள்ளது. தற்போது சுரங்க விரிவாக்கத்திற்காக 49 கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறிவிட்டு எந்த வாக்குறுதியையும் என்.எல்.சி. நிறைவேற்றவில்லை. எனவே என்.எல்.சி. மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த என்.எல்.சி.யால் மக்களுக்கும், இந்த மாவட்டத்திற்கும் எந்த பயனும் கிடையாது.
5 பேர் கொண்ட குழு அமைப்பு
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கும் என்.எல்.சி.யில் வேலை வழங்க வேண்டும். இல்லையென்றால் என்.எல்.சி நிர்வாகத்தை மூடிவிட்டு வெளியேற வேண்டும்.
8 வழிச்சாலையை எதிர்த்த தி.மு.க., தற்போது அதனை ஏற்கிறது. 8 வழிச்சாலையால் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலம் பாதிக்கப்படுவதால் தான் பா.ம.க. எதிர்க்கிறது. என்.எல்.சி.யால் நிலக்கரி துகள்கள் காற்றில் சூழ்ந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. உங்கள் கஷ்டத்தில் பா.ம.க. பங்கெடுக்கும். ஆனால் மற்றவர்கள் வேஷம் போட்டுக்கொண்டுள்ளனர். அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் என்.எல்.சி.யை பா.ம.க. எதிர்கொள்ளும்.
முதல்கட்டமாக ஜி.கே.மணி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். எங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால் போராட்டத்தை தொடருவோம். நிலம் கையகப்படுத்தும் முயற்சியை எல்.எல்.சி. கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story