தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே இன்று கடலில் நீந்தி செல்லும் மாணவர்


தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே  இன்று கடலில் நீந்தி செல்லும் மாணவர்
x
தினத்தந்தி 28 March 2022 12:59 AM IST (Updated: 28 March 2022 12:59 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே இன்று தேனி மாணவர் கடலில் நீந்தி செல்கிறார்

ராமேசுவரம், 

தேனியை சேர்ந்தவர் நீதிராஜன். இவருடைய மனைவி அனுஷா. இவர்களுக்கு சினேகன் (வயது 14), நிகாஷினி(10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இதில் 8-ம் வகுப்பு மாணவனான சினேகன் சிறுவயதிலிருந்தே நீச்சலில் அதிக ஆர்வம் உள்ளவர். இவர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கும், தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் இடைவிடாமல் நீந்தி வரவும் திட்டமிட்டுள்ளார். அதற்காக ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இருந்து இன்று(திங்கட்கிழமை) மதியம் 2 மணிக்கு இந்த சாதனை பயணத்தை கடலிலிருந்து நீந்த தொடங்குகிறார். அப்போது தமிழக அரசின் விளையாட்டு துறை சார்பில் கண்காணிப்பாளராக லோகநாதன், நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் ரோஜர் உள்ளிட்ட 16 பேர் படகில் இந்த சிறுவனுக்கு பாதுகாப்பாக செல்கின்றனர். இதுபற்றி நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் கூறும்போது. தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு ஒரே நேரத்தில் 56 கிலோமீட்டர் தூரம் நீந்தி இந்தியாவை சேர்ந்த எந்த ஒரு வீரரும் சாதனை படைக்கவில்லை. இந்த நீச்சல் பயணம் சாதனைப் பயணமாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம்.  இவ்வாறு அவர் கூறினார்.  கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த சுஜேத்தா (வயது 38) என்ற பெண் ஒருவர் இதே சாதனையை செய்ய முயற்சி செய்து 42 கிலோமீட்டர் வரை மட்டுமே நீந்தி ஜெல்லி மீன்கள் தாக்கத்தால் நீந்த முடியாமல் சாதனைப் பயணத்தை பாதியில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story