புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பாலம் வேண்டும்
விருதுநகர் மாவட்ட நூலகம் அருகே உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் சாலை போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. மழை பெய்தால் சாக்கடையில் இருந்து கழிவுநீரானது வௌியேறி சாலையில் தேங்கி ஓடுகிறது. இதனால் இந்த வழியை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையை கடக்க புதிய பாலம் அமைத்து தர வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.
வேகத்தடை அமைப்பார்களா?
மதுரை மாவட்டம் சாந்திநகர், அஞ்சல் நகர், கூடல்நகர் சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இந்த சாலைகளில் வேகத்தடை இல்லாத காரணங்களால் வாகனங்கள் வேகமாக செல்கிறது. இதனால் பாதசாரிகள் சாலையை கடக்க முடியவில்லை. அடிக்கடி விபத்தும் இப்பகுதியில் நிகழ்ந்து வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த சாலையில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். பிரபு, தத்தனேரி.
பூட்டிகிடக்கும் அலுவலகம்
விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டியில் அருகே உள்ள மகாராஜபுரம் வி.ஏ.ஓ. அலுவலகம் சில நாட்களாக திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இந்நிலையில் வருவாய் சான்றிதழ், வருவாய் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வாங்க தாமதம் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூட்டி கிடக்கும் அலுவலகத்தை திறக்க வேண்டும். மாரிமுத்து, தம்பிபட்டி.
நாய்கள் தொல்லை
மதுரை கள்ளிக்குடி தாலுகா கல்லணை கிராமத்தில் நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றது. வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் மிகவும் அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்கள், கல்லணை.
விபத்து அபாயம்
விருதுநகர் திருத்தங்கல் 13-வது வார்டு பகுதியில் கால்நடைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து கொண்டு நகர மறுக்கின்றன. இரவில் சாலையிலேயே படுத்து உறங்குகின்றன. இதனால் தினமும் இப்பகுதியில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்தி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். செல்வம், திருத்தங்கல்.
குடிநீர் தட்டுப்பாடு
ராமநாதபுரம் நகர் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ேகாடை காலம் வரும் முன்னரே தண்ணீரானது குறைந்த அளவிலேயே வினியோகிக்கப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்.
எரியாத தெருவிளக்குகள்
மதுரை 73-வது வார்டு முத்துப்பட்டி மெயின் ரோடு சுசிலா ரங்கநாதன் தெருவின் எதிரில் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத மின்விளக்குகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனகராஜ், முத்துப்பட்டி.
Related Tags :
Next Story