வள்ளியூரில் தனியார் ேவலைவாய்ப்பு முகாம்: 453 பேருக்கு பணி நியமன ஆணை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
வள்ளியூரில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 453 பேருக்கு பணி நியமன ஆணையை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
வள்ளியூர்:
வள்ளியூரில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 453 பேருக்கு பணி நியமன ஆணையை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
வேலைவாய்ப்பு முகாம்
நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வள்ளியூர் பெட் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழில்துறை நிறுவனங்கள் பங்கு பெற்றன.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பணி நியமன ஆணை
தொடர்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். வேலை வாய்ப்பு துறை நெல்லை மண்டல இணை இயக்குனர் மகாலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு, 453 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் மு.அப்பாவு பேசும்போது ‘தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று உன்னத ேநாக்கத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு சென்று முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ரூ.2,600 கோடி முதலீட்டில் 5 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது’ என்றார்.
நிகழ்ச்சியில் ராதாபுரம் தாசில்தார் யேசுராஜன், பெட் கல்வி குழும உறுப்பினர் சாகுல்ஹமீது, மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சாந்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story