திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் பங்குனி தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
அழகிய நம்பிராயர் கோவில்
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருவுருவங்களில் அருள் பாலித்து வருவது சிறப்புமிக்கதாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழா நாட்களில் நம்பி சுவாமிகள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5 நம்பி சுவாமிகள், சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5-ம் திருநாளன்று நடந்தது.
தேரோட்டம்
சிகர நிகழ்ச்சியாக 10-ந் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் நம்பி சுவாமிகள், தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதன் பின்னர் தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள், கொளுத்தும் வெயிலில் “கோவிந்தா, கோவிந்தா” என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி தேர் நிலைக்கு வந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்குறுங்குடி போலீசார் செய்திருந்தனர். தேருக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட திருக்குறுங்குடி கோவில் யானைகள் சென்றன. இன்று (திங்கட்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது.
Related Tags :
Next Story